Published : 16 Jul 2014 12:00 AM
Last Updated : 16 Jul 2014 12:00 AM

பிரேசில் பயிற்சியாளரின் ராஜினாமா ஏற்பு

பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளர் லூயிஸ் பெலிஸ் ஸ்காலரியின் ராஜினாமாவை அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதியில் ஜெர்மனியிடம் 7-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அடுத்தாக மூன்றாவது இடத்துக்கு நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்திடம் 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் தோற்றது.

உலக கோப்பை கால்பந்து போட்டியை பிரேசில் நடத்தியதால் அந்நாடு குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பிரேசில் வீரர்கள் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையுமே அளித்தனர்.

74 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் பிரேசில் அணி அடுத்தடுத்து இரண்டு தோல்விகளையும் தழுவியது, அந்நாட்டு ரசிகர்களை மட்டுமன்றி, பிற நாடுகளில் உள்ள பிரேசில் ரசிகர்களையும் நிலைகுலைய வைத்தன. தங்கள் அணியிடம் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்த பிரேசில் ரசிகர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இந்நிலையில் தோல்விகளுக்கு முழுப் பொறுப்பேற்று பதவி விலக தயாராக இருப்பதாக பிரேசில் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்காலரி கூறியிருந்தார். 2002-ம் ஆண்டு உலகக் கோப்பையின் போது முதல்முறையாக ஸ்காலரி பிரேசில் அணியின் தலைமை பயிற்சியாளரானார். அப்போது பிரேசில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த ஆண்டு இறுதியிலேயே தனது பதவியை ராஜினாமா செய்த ஸ்காலரி, பிறகு போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளராகவும், தொடர்ந்து கிளப் அணிகளின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

2012-ம் ஆண்டில் மீண்டும் பிரேசில் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை பிரேசிலில் நடைபெறுவதால் நிச்சயமாக கோப்பையை வென்றாக வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு ஸ்காலரியை பயிற்சியாளராக நியமித்தது. 2002-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று தந்த பயிற்சியாளர் என்பதால் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் பிரேசில் மோசமான தோல்விகளை சந்தித்ததால், அவர் பதவி விலக முன்வந்தார். அவரது ராஜினாமா இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜோஸ் மரியா மரின் கூறியது:

ஸ்காலரி மற்றும் அவரது தொழில்நுட்பக் குழுவினர் பிரேசில் அணியின் பொறுப்பில் இருந்து விலக தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தனர். அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். அணிக்காக அவர்கள் கடுமையாக உழைத்தனர். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x