Published : 29 Jul 2023 06:11 AM
Last Updated : 29 Jul 2023 06:11 AM
சென்னை: ரூ.16 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கு, ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம், பார்வையாளர் மாடம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் ஆகஸ்ட் 3 முதல்12-ம் தேதி வரை 7-வது “ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை போட்டி- 2023” நடைபெறவுள்ளது.
16 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் மீண்டும் நடைபெறும் இப்போட்டியை ஹாக்கி இந்தியா அமைப்புடன் இணைந்து தமிழகஅரசு நடத்த உள்ளது. இப்போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய 6 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டியை சிறப்பாக நடத்த, தமிழக அரசு சார்பில் ரூ.17.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் ரூ.12 கோடி நிதியை ஹாக்கி இந்தியா நிர்வாகிகளிடம், அமைச்சர் உதயநிதி கடந்த ஜூலை6-ம் தேதி வழங்கினார்.
இப்போட்டியை சிறப்பாக நடத்தும் வகையில் ரூ.16 கோடி செலவில், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தரத்திலான முதன்மை ஹாக்கி செயற்கை இழை ஆடுகளம், வீரர்கள் பயற்சி செய்வதற்கான செயற்கை இழை ஆடுகளம் மற்றும்இணைப்பு பணிகள், பார்வையாளர்களுக்கான இருக்கை வசதிகள்,சிறப்பு விருந்தினர்கள் அமருவதற்கான பார்வையாளர் மாடம், விளையாட்டு வீரர்களுக்கான அறைகள், மின்னொளி வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள், பிற சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்பணிகள் முடிவடைந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, மேம்படுத்தப்பட்டஹாக்கி விளையாட்டரங்கம்,ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம், கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றை திறந்து வைத்து பார்வையிட்டார்.
முன்னதாக, “ஆசிய ஆடவர்ஹாக்கி கோப்பை - 2023” போட்டியின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சிலையை முதல்வர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் - செயலர் ஜெ. மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT