Last Updated : 29 Jul, 2023 06:17 AM

 

Published : 29 Jul 2023 06:17 AM
Last Updated : 29 Jul 2023 06:17 AM

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4 | இறுதிப் போட்டியில் கால்பதித்தது கோவா அணி - ஆல்வரோ ரோபிள்ஸ், ரீத் ரிஷ்யா அபாரம்

டெல்லி அணியின்  ஜா அகுலாவுக்கு எதிராக வெற்றி பெற்ற கோவா வீராங்கனை ரீத் ரிஷ்யா.

புனே: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4-ல் டெல்லி தபாங் அணிக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கோவா சாலஞ்சர்ஸ் அணி.

இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள்டென்னிஸ் சீசன் 4 போட்டிகள் புனேவில் உள்ள ஷிவ்சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த தொடர் தற்போது நாக் அவுட் சுற்றை எட்டி உள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி டிடிசி -கோவா சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் டெல்லி தபாங் அணியின் சத்தியன் ஞானசேகரன், கோவா சேலஞ்சர்ஸ் அணியின் ஹர்மீத் தேசாயை எதிர்த்து விளையாடினார். இதில் சத்தியன் 2-1 (11-3, 11-10, 8-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய சத்தியன் 11-3 என தன்வசப்படுத்தினார்.

2-வது செட்டில் சத்தியன் தொடக்கத்தில் 2-5 பின்தங்கியிருந்தார். அதன் பின்னர் தொடர்ச்சியாக புள்ளிகளை குவித்து 8-7 என முன்னிலை பெற்றார். ஹர்மீத் தேசாய் மீண்டு வந்து 9-9 என சமநிலைக்கு கொண்டு வந்தார். ஆனால் சத்தியன் தனது அனுபவத்தால் கோல்டன் புள்ளிவரை எடுத்துச் சென்று 11-10 நிறைவு செய்தார்.

கடைசி செட்டில் ஹர்மீத் தேசாய் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டார். இதனால் விரைவிலேயே 5-1 என முன்னிலை பெற்றார். இதன் பின்னர் சத்தியன் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று 6-6 என சமநிலையை ஏற்படுத்தினார். ஆனால்அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறினார் சத்தியன். அடுத்தடுத்த தவறுகளால் புள்ளிகளை பறிகொடுத்தார். இதனால் 6-10 என பின்தங்கினார். முடிவில் கடைசி செட்டை சத்தியன் 8-11 என இழந்தார்.

2-வதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் டெல்லி அணியின் அய்கிகா முகர்ஜி, கோவா அணியின் சுதாசினியை எதிர்கொண்டார். இதில் அய்கிகா முகர்ஜி 1-2 ( 5-11, 11-8, 3-11) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். முதல் செட்டை சுதாசினி 11-5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

2-வது செட்டில் அய்கிகா முகர்ஜி 5-3 என முன்னிலை பெற்றார். சுதாசினி 5-7 என நெருங்கி வந்தார். ஆனால் அய்கிகா முகர்ஜி சிறப்பாக செயல்பட்டு 11-8 நிறைவு செய்தார். வெற்றியை தீர்மானித்த 3-வது செட்டில் விரைவாக புள்ளிகளை குவித்த சுதாசினி 5-1 முன்னிலை வகித்தார். இறுதியில் 11-3 வெற்றியை வசப்படுத்தினார்.

3-வது ஆட்டம் கலப்பு இரட்டையர் பிரிவில் நடைபெற்றது. இதில் டெல்லி அணியின் சத்தியன், பார்பேராரா ஜோடி, கோவா அணியின் ஹர்மீத் தேசாய், சுதாசினி ஜோடியை சந்தித்தது. இதில் சத்தியன், பார்போரா ஜோடி 2-1 (8-11,11-10, 11-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

முதல் செட்டில் சத்தியன் ஜோடி 3-9 என பின்தங்கி இருந்தது. ஆனால் தொடர்ந்து புள்ளிகள் குவித்து 8-10 என நெருங்கியது. அப்போது சத்தியன் ஜோடி செய்த தவறால் இந்த செட்டை 8-11 என இழக்க நேரிட்டது. 2-வது செட்டில் ஒரு கட்டத்தில் சத்தியன் ஜோடி 7-6 என முன்னிலை வகித்தது. கோல்டன் புள்ளிவரை சென்ற இந்த செட்டைசத்தியன் ஜோடி 11-10 என கைப்பற்றியது. வெற்றியை தீர்மானித்த கடைசி செட்டில் சத்தியன், பார்போரா ஜோடி 11-10 என வெற்றி கண்டது.

4-வது ஆட்டம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்றது. இதில் டெல்லி அணியின் ஜான் பெர்சன், கோவா அணியின் ஆல்வரோ ரோபிள்ஸுடன் மோதினார். இதில் ஜான் பெர்சன் 1-2 (11-6, 10-11, 7-11) என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 4 ஆட்டங்களின் முடிவில் இரு அணிகள் இடையிலான மோதல் 6-6 என சமநிலையை அடைந்தது. இதனால் கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் சுவாரஸ்யத்தை அதிகரித்தது.

இதில் டெல்லி அணியின் ஜா அகுலா, கோவா அணியின் ரீத் ரிஷ்யாவுடன் மோதினார். முதல் செட்டை ரீத் ரிஷ்யா 11-4 என கைப்பற்றினார். 2-வது செட்டில் தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்திய ஜா அகுலா 11-6 என தன்வசப்படுத்தினார். கடைசி செட்டில் ஸ்ரீஜா அகுலா 8-11 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். முடிவில் இந்த மோதலில் கோவா சாலஞ்சர்ஸ் 8-7 என்ற கணக்கில் டெல்லி தபாங் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x