Published : 28 Jul 2023 04:47 PM
Last Updated : 28 Jul 2023 04:47 PM

சஞ்சு சாம்சன் திறமையை அழித்தொழிக்கிறாரா ரோகித் சர்மா?

சஞ்சு சாம்சன்

பிரிட்ஜ்டவுனில் நேற்று நடைபெற்ற மகா அறுவையான முதல் ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி நிர்ணயித்த 114 ரன்களை சேஸ் செய்ய இந்திய அணி சற்றே தடுமாறி 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

உலகக் கோப்பைக்காக வீரர்களைத் தேர்வு செய்ய மேற்கொண்ட பரிசோதனை முயற்சி இது என சொல்லப்படுகிறது. ஆனால், சஞ்சு சாம்சனை மட்டும் பரிசோதனைக்குக் கூட அணியில் சேர்ப்பதில்லை. சூர்யகுமார் யாதவ் போன்ற வீரருக்கு வாய்ப்பு என்பதை ரோகித் சர்மா சொல்லாமல் சொல்வதாக ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை சமூக ஊடகங்களில் முன் வைக்கின்றனர்.

விராட் கோலியை பேட் செய்ய இறக்கப் போவதில்லை என்றால் எதற்காக ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அந்த இடத்தில் சஞ்சு சாம்சனை தேர்வு செய்திருக்கலாம். அதே போல ஹர்திக் பாண்டியாவிடம் கேப்டன்சியைக் கொடுத்து விட்டு ரோகித் சர்மா தன் இடத்தை சஞ்சு சாம்சனுக்கு வழங்கக் கூடாது என்பதும் பலரது கேள்வியாக உள்ளது.

மே.இ.தீவுகள் அணி பரிதாபத்தின் உச்சத்தில் உள்ளது. அணி முற்றிலும் உடைந்து நொறுங்கக் கூடிய, கிரிக்கெட் வரைபடத்திலிருந்து காணாமல் போகும் நிலையில் உள்ளது. இந்த அணியுடன் விளையாட எதற்கு விராட் கோலி, ரோகித் சர்மா? இந்த பரிதாப பவுலிங்கிலும் சோடை போகும் ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ்தான் 2023 உலகக் கோப்பையின் பிரதான வீரர்களா? மற்றொரு சந்தேகம் என்னவென்றால் குல்தீப் யாதவுக்கு உலகக் கோப்பை அணியில் லெவனில் வாய்ப்பு தருவார்களா இல்லையா என்பதுதான். அவரை இப்படிப் பயன்படுத்திக் கொள்வது. ஆனால், உலகக் கோப்பையின் போது அக்சர் படேல், ஜடேஜா என்றுதான் சேர்க்கை இருக்கும்.

அணியில் வாய்ப்பு கொடுக்க இந்த தொடர் ஒரு நல்ல வாய்ப்பு என்கிறார் கேப்டன் ரோகித் சர்மா. ஆனால், இவர்களை உலகக் கோப்பை தொடரில் பயன்படுத்தப் போகிறோமா? இல்லையா? என்பது உறுதியாக இல்லாத நிலையில் ஏன் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை அளித்து, பிறகு துரோகம் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இது சாதாரண கிரிக்கெட் ரசிகனின் கேள்வியாக உள்ளது.

சஞ்சு சாம்சன் தன் வாழ்நாளில் கிரிக்கெட்டின் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். அவரை உலகக் கோப்பைக்கு 4ம் நிலையில் ஒரு தூணாக மாற்றுவதுதான் பயிற்சியாளர் திராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவின் கடமை. மாறாக இருவரும் சஞ்சுவின் திறமையை அழித்தொழிப்பதில் குறியாக இருப்பது போல செயல்பட்டு வருகிறார்கள்.

உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களில் இந்த 4ம் நிலையில் விளையாடப் போகும் வீரர் குறித்து பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. கடந்த 2019 உலகக் கோப்பையில் இப்படித்தான் அம்பத்தி ராயுடுதான் என்று அவருக்கு நம்பிக்கையூட்டி கடைசியில் அனுபவமற்ற ‘ஆல்ரவுண்டர்’ விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். இவரை 3டி வீரர் என்றார் அப்போதைய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத். இந்த ஜோக்கைக் கேட்டு ராயுடு மட்டுமல்ல இந்தியாவே சிரித்தது.

தற்போது அந்த இடத்தில் ஆட சூர்யகுமார் யாதவை அணி நிர்வாகம் ஏற்கெனவே தீர்மானித்து விட்டது போல தெரிகிறது. கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் அவரது ரன்கள் 14, 0, 0, 0, 19. நேற்று 25 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். நடுவில் ஒரே தடுப்பாட்டம் தான். இந்த பவுலிங்கையே தன்னம்பிக்கையுடன் ஆடாதவர் எப்படி உலகக் கோப்பையில் ஆஸி. பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற அணியின் வலுவான பந்துவீச்சை எதிர்கொள்வார்?

இடது கை சுழற்பந்து வீச்சாளர் மோட்டி வீசிய அனைத்துப் பந்துகளுக்கும் சூர்யா ஆடிய ஒரே ஷாட் ஸ்வீப். ஆனால், ஒரு ஸ்வீப் மட்டையில் படாமல் கால்காப்பில் பட்டது. எல்.பி.ஆனார். இந்த வாய்ப்பை சஞ்சு சாம்சனுக்கு அளித்திருக்கலாமே ரோகித் என்று சொல்லி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் குரல் கொடுத்துள்ளனர். இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் இருவரும் இருந்த போது விக்கெட் கீப்பிங்கை சஞ்சு தான் மேற்கொண்டார். ஆனால், இப்போது திடீரென சஞ்சு வேண்டாதவர் ஆனது எப்படி? இஷான் கிஷனின் வர்த்தக மதிப்பு சஞ்சுவை விட அதிகமோ என்றே கேட்கத் தோன்றுகிறது.

இதில் ஆட்டம் முடிந்தவுடன் கேப்டன் ரோகித் சர்மா, ‘அனைவருக்கும் வாய்ப்பளிக்க விரும்புகிறோம்’ என்று கூறியது ரசிகர்கள் பலரின் கோபத்தைக் கிளறியுள்ளது. எங்கு அனைவருக்கும் வாய்ப்பு தருகிறீர்கள் ரோகித்? சஞ்சுவுக்கு வாய்ப்பளித்தீர்களா? என்று சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

— AV!29 (@SprotsLover29) July 27, 2023

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x