Published : 27 Jul 2023 06:36 AM
Last Updated : 27 Jul 2023 06:36 AM
பார்படாஸ்: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் ஆட்டம் பார்படாஸில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என வென்றது.இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் விளையாட உள்ளன. இதில் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் பார்படாஸில் இன்று இரவு நடைபெறுகிறது.
டெஸ்ட் தொடரை போன்று ஒருநாள் போட்டி தொடரிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும். இந்த தொடரை ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான சிறந்த அணி சேர்க்கையை உருவாக்குவதற்கு இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.இந்த வகையில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுவேந்திர சாஹல், உம்ரன் மாலிக் ஆகியோருக்கு ஒருநாள் போட்டி தொடர் சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது.
சூர்யகுமார் யாதவால் டி 20 வடிவில் செயல்படுத்தும் செயல்திறனை ஒருநாள் போட்டிகளில் பிரதிபலிக்க முடிவதில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரில் சூர்யகுமார் யாதவ் 3 ஆட்டங்களில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து மோசமான சாதனையை படைத்திருந்தார். 4-வது இடத்தில் களமிறங்கும் அவர், தனக்கான இடத்தை அணியில் வேரூன்றி கொள்வதில் கவனம் செலுத்தக்கூடும்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பெறுவதில் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் இடையே போட்டி நிலவக்கூடும். இருப்பினும் டெஸ்ட் போட்டியில் இஷான் கிஷன் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் அவருக்கே முன்னுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது நிகழ்ந்தால் சஞ்சு சாம்சனை பேட்டிங்கில் நடுவரிசையில் களமிறக்குவது குறித்து அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும். எப்போதுமே சாம்சனுக்கு இந்திய அணியில் நிலையான இடம் இருந்தது இல்லை. 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள அவரது சராசரி 66 ஆக உள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட்டுக்கும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான். ஏனெனில் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக ஷுப்மன் கில் களமிறங்கி வருகிறார். துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் தொடருக்கு பின்னர் தற்போதுதான் சர்வதேச போட்டியில் களமிறங்க உள்ளார். இதனால் அவர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. வேகப்பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த உம்ரன் மாலிக்கிற்கு இந்த தொடர் சிறந்த வாய்ப்பாக அமையக்கூடும்.
23 வயதான உம்ரன் மாலிக் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும் விக்கெட் வீழ்த்தும் திறன் இருப்பது பலம் சேர்க்கக்கூடும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் குல்தீப் யாதவுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட நிலையில் இம்முறை யுவேந்திர சாஹல் விளையாடும் லெவனில் இடம் பெறக்கூடும்.வேகப்பந்து வீச்சு துறையை மொகமது சிராஜ் வழிநடத்தக்கூடும். ஜெயதேவ் உனத்கட், முகேஷ் குமார், ஷர்துல் தாக்குர் ஆகியோரும் அணியில் உள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறத் தவறிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவுக்கு எதிரான தொடருடன் புதிய தொடக்கத்தை எதிர்பார்க்கிறது. ஷிம்ரன் ஹெட்மயர், ஓஷேன் தாமஸ் ஆகியோரது வருகை அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். பேட்டிங்கில் அலிக் அத்தானாஸ், ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
அணிகள் விவரம்
மேற்கு இந்தியத் தீவுகள்: ஷாய் ஹோப், ரோவ்மன் பவல், அலிக் அத்தனாஸ், யானிக் கரியா, கீசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர், அல்சாரி ஜோசப், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், கெவின் சின்க்ளேர், ஓஷேன் தாமஸ்.
இந்தியா: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெயதேவ் உனத்கட், மொகமது சிராஜ், உம்ரன் மாலிக், முகேஷ் குமார்.
நேரம்: இரவு 7 மணி
நேரலை: தூர்தர்ஷன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT