Published : 26 Nov 2017 03:18 PM
Last Updated : 26 Nov 2017 03:18 PM

ஆக்ரோஷப் பந்து வீச்சில் தோல்வி வலியை எதிர்நோக்கும் இங்கிலாந்து: பிரிஸ்பனில் ஆஸி. வெற்றி உறுதி

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியை நன்றாகத் தொடங்கி விட்டு கடைசியில் ஆஸ்திரேலியாவிடம் சரணடையும் நிலைக்குச் சென்றுவிட்டது. 4-ம் நாளான இன்று தன் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 195 ரன்களுக்குச் சுருண்டது, இதனையடுத்து 170 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்துள்ளது.

வெற்றி நாளை உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் வார்னர் 60 ரன்களுடனும், பேங்க்ராப்ட் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

காலையில் முதல் முக்கால் மணி நேர ஆட்டத்தில் ஜோ ரூட், ஸ்டோன்மேனை வீழ்த்த ஆஸ்திரேலியா குறைந்தது 2 மணி நேரத்துக்காவது திணறும் என்ற வகையில்தன பவுலிங் இருந்தது, ஆனால் நேதன் லயன் மீண்டும் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தினார். அவரது பந்துகள் ரவுண்ட் த விக்கெட்டில் குட்லெந்தில் பிட்ச் ஆகி இடது கை ஸ்டோன்மேனை கடும் சிக்கலுக்குள்ளாக்கியதோடு, ஜோ ரூட்டையும் திணறடித்தது, காரணம், காற்றில் பந்தின் திசை மாறி பிட்ச் ஆன பிறகு வேறு திசையில் ஸ்பின் ஆனது. இவரைத் தவிர மிட்செல் ஸ்டார்க், கமின்ஸ் 21 பந்துகளில் 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பெவிலியன் அனுப்பினர்.

ஆகவே 3-ம் நாள் மாலை ஜோஷ் ஹேசில்வுட் ஆரம்பித்து வைத்த ஆக்ரோஷம், 4-ம் நாளில் நேதன் லயன் திருப்பு முனையுடன் ஸ்டார்க், கமின்ஸ் ஆக்ரோஷத்துடன் இங்கிலாந்தின் தோல்விக்கு இட்டுச் சென்றது.

மொயின் அலி ஸ்டம்ப்டு தீர்ப்பு சர்ச்சை:

ஆனால் சர்ச்சை இல்லாமலில்லை. எப்போதும் ஆஸ்திரேலியாவில் எதிரணியினரின் ஒரு முக்கிய விக்கெட் சர்ச்சைக்குரிய விதத்தில் கைப்பற்றப்படும். இது வரலாறு. இன்றும் மொயின் அலிக்கு, அதுவும் 3-வது நடுவர் ஏகப்பட்ட ரிவியூக்களைப் பார்த்து ஸ்டம்ப்டு தீர்ப்பு வழங்கியது உண்மையில் வேதனையான ஒரு தருணம்.

நடந்தது இதுதான். இன்னிங்சின் 53-வது ஓவரை லயன் வீசினார். முதல் பந்தை நன்றாக தடுத்தாடினார் மொயின் அலி. 2-வது பந்து நன்றாகத் தூக்கி வீசப்பட்டு பிட்ச் ஆகி பெரிய அளவில் திரும்பியது, நன்றாக முன்காலை நீட்டி ஆட முயன்றார் மொயின் அலி பந்து திரும்பியதால் பீட் ஆகி விக்கெட் கீப்பர் பெய்னிடம் சென்றது, காலை நீட்டி ஆடும் செயல்பாட்டில் ஸ்டம்ப்டு செய்யப்பட்டார், அவரது பின்னங்கால் சற்றே கோட்டுக்கு வெளியே வந்து பிறகு சற்றே உள்ளே கொண்டு வரப்பட்டது, கிரீசின் மேல் கால் இருப்பதாகத் தெரிந்தாலும், ஒரு துளிப் பகுதி உள்ளே இருந்தால் போதுமானது, அப்படித்தான் இருந்தது. ஏகப்பட்ட கோணங்களில் ரீப்ளே பார்க்கும் போதே 3-ம் நடுவருக்கும் சந்தேகம் இருப்பதாகவே பொருள்.

அப்படி சந்தேகம் ஏற்படும் போது அதன் பலனை பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாக வழங்குவதுதான் கிரிக்கெட் ஆட்ட உணர்வு, மரபு எல்லாமும். ஏனெனில் பவுலர் மீண்டும் அடுத்த பந்தே கூட பேட்ஸ்மெனை வீழ்த்த முடியும், ஆனால் பேட்ஸ்மெனுக்கு ஒருமுறை அவுட் கொடுத்தால் அதோடு சரி. இதனால்தான் சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மென்களுக்குச் செல்வது வழக்கம். மைக்கேல் கிளார்க் வர்ணனையில் இதனை நாட் அவுட் என்றே தெரிவித்தார், மேலும் சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மென்களுக்கே என்றும் கூறினார்.

ஆனால் இன்று ஏகப்பட்ட ரீப்ளேக்குப் பிறகு ‘டைட்’ என்று 3-ம் நடுவர் கூறுவதும் நமக்கு கேட்கிறது, ஆனால் எதுவும் திட்டவட்டமாக கூற முடியாத நிலையில் மொயின் அலி ஸ்டம்ப்டு என்று தீர்ப்பளிக்கப்பட்டார். மொயின் 64 பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட 40 ரன்கள் எடுத்து குறிப்பாக நேதன் லயனை நன்றாக அடித்து ஆடிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேதன் லயன் திருப்பு முனை:

மார்க் ஸ்டோன் மேன் 81 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களுக்கு நன்றாக ஆடி வந்த போது. நேதன் லயன் பந்து ஒன்று சற்றே நேராக சறுக்கிக்கொண்டு வர எட்ஜ் ஆனது ஸ்மித் கேட்ச் எடுத்தார் இங்கிலாந்து 62/3.

டி.ஜே.மலான் இறங்கி 4 ரன்களில் லயனின் ரவுண் த விக்கெட் பந்து ஒன்று காற்றில் உள்ளே பிட்ச் ஆகி சற்றே திரும்பி எழும்பியது தடுத்தாடும் முயற்சியில் எட்ஜ் ஆகி ஸ்மித்திடம் தஞ்சமடைந்தது. இங்கிலாந்து 74/4. ஜோ ரூட் 51 ரன்கள் எடுத்து ஒருமுனையில் நிற்க எதிர்முனையில் விக்கெட்டுகள் விழுந்தன. நேதன் லயனை கிரீசிலிருந்தே ஆடுவது என்ற கெட்டப் பழக்கத்தினால்தான் இங்கிலாந்து இந்தத் தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஸ்மித் மிகச்சரியாக ஜோஷ் ஹேசில்வுட்டை பவுலிங்கிற்கு அழைத்தார். முதல் இன்னிங்ஸ் போலவே முன் காலை நீட்டி ஆட முயன்றார் பந்து உள்ளே வரும்போது அதனை விலக்கிக் கொண்டு மட்டையை கொண்டு வர முடியவில்லை, எல்.பி.ஆனார். ரிவியூ செய்யவில்லை, செய்திருந்தாலும் பயனிருந்திருக்காது, காரணம் ரீப்ளே 3 சிகப்புகளைக் காட்டியது.

முதல் இன்னிங்சிலும் இப்படித்தான் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா அவரை ஒர்க் அவுட் செய்துள்ளது. திராவிடுக்கும் இந்தப் பிரச்சினை கடைசி காலங்களில் தலைதூக்க ஏகப்பட்ட பவுல்டுகள் ஆனது தெரிந்ததே. தலை நேராக இருக்க, பந்தை நேர் மட்டையில் பந்து வந்த பிரகு ஆட வேண்டும், ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட பேட்ஸ்மென்களின் பழக்க வழக்கத்துக்கு ஏற்ப சில விஷயங்களை மாற்றிக் கொள்வதில் சிரமப்படுவார்கள், அதுதான் ஜோ ரூட்டிற்கும் ஏற்பட்டுள்ளது.

மொயின் அலி இறங்கி நன்றாக ஆடினார், ஸ்வீப், மேலேறி வந்து லாங் ஆனில் ஒரு பவுண்டரி என்று லயனைச் சந்தித்தார், 40 ரன்கள் எடுத்த நிலையில்தான் ஸ்டம்ப்டு தீர்ப்பு வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி 42 ரன்களைச் சேர்க்க, பேர்ஸ்டோ-கிறிஸ் வோக்ஸ் ஜோடி 30 ரன்களைச் சேர்த்தனர். கிறிஸ் வோக்ஸ் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பவுன்சருக்கு 2வது ஸ்லிப்பில் இரையானார்.

ஜானி பேர்ஸ்டோ 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 75 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார், பாசிட்டிவ்வாக ஆடினார், ஆனால் அவரும், தேர்ட்மேனில் பீல்டர் கொண்டு வரப்பட்டதை தெரிந்துதான் ஆடினாரா இல்லை தெரியவில்லையா என்று புரியவில்லை, ஷார்ட் பிட்ச் பந்தை தேர்ட்மேனில் தூக்கி அடித்து கேட்ச் ஆனார். பிராடை, ஸ்டார்க்கும், பால் என்ற வீரரை கமின்சும் வீழ்த்தினர். இங்கிலாந்து 71.4 ஓவர்களில் 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், ஹேசில்வுட், லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

170 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் பேங்கிராப்ட், வார்னர் ஒன்றுமேயில்லாத இங்கிலாந்து பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விக்கெட்டுகளை விட்டுக் கொடுக்காமல் 114 ரன்கள் எடுத்தனர். நாளைக்கு வெற்றி உறுதி ஆஷஸில் ஆஸி. 1-0 என்று முன்னிலை பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x