Published : 26 Jul 2023 04:37 PM
Last Updated : 26 Jul 2023 04:37 PM

குறைந்த பந்துகளில் அதிக ரன்கள்: அதிரடி கிங் விரேந்திர சேவாக் தான் டாப்!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 டெஸ்ட் தொடரில் ஓல்ட் ட்ராபர்ட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஜாக் கிராலி 182 பந்துகளில் 189 ரன்கள் விளாசினார். தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோரில் குறைந்த பந்துகளில் எடுத்தது இதுதானோ என்றும் பலரும் நினைக்கக் கூடும். ஆம்! ஆனால் இது ஆஷஸ் சாதனைதான்! ஆல் டைம் சாதனையில் இந்த வகையில் இந்திய அணியின் அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் தான் முதலிடம்.

சேவாக் மெல்போர்னில் 2003-04 தொடரில் பெரிதும் கொண்டாடப்படும் பாக்சிங் டெ டெஸ்ட் முதல் நாளில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சைப் புரட்டி எடுத்து 25 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 233 பந்துகளில் 195 ரன்கள் எடுத்தார். ஒருவேளை இரட்டைச் சதம் எடுத்திருந்தால் இதுதான் அதிக பந்துகள் எடுத்துக் கொண்ட இரட்டைச் சதமாக இருந்திருக்கும். இதன் பிறகு சேவாக் எடுத்த மிகப்பெரிய தனிப்பட்ட ஸ்கோர்கள் எல்லாமே ஜாக் கிராலியை ஒப்பிடும் போது மிக மிகக் குறைந்த பந்துகளில் விளாசிய பெரிய சதங்களே.

ஆஷஸ் தொடரில் 2001-ம் ஆண்டு எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் ஆடம் கில்கிறிஸ்ட் இங்கிலாந்து பவுலிங்கை உரித்துத் தொங்க விட்ட இன்னிங்ஸில் 143 பந்துகளில் 152 ரன்கள் விளாசியதே ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரிசையில் குறைந்த பந்து அதிக ஸ்கோர் என்ற வரிசையில் இருந்து வந்தது. அதை இப்போது ஜாக் கிராலி முறியடித்துள்ளார். சமீபத்தில் ட்ராவிஸ் ஹெட் கூட 148 ரன்களைக் குறைந்த பந்தில் எடுத்து ஆஷஸ் சாதனையை வைத்திருந்தார்.

ஆனால் டெஸ்ட் போட்டிகளில் மேற்கூறியதை விடவும் அதிக ரன்களை குறைந்த பந்துகளை எடுத்த தருணங்கள் எட்டு என்கிறது புள்ளி விவரங்கள். இதில் இன்று வரை மிகப்பெரியது, இனியும் முறியடிக்க முடியாமலே கூட போகக்கூடிய சாதனை சென்னையில் 2007-08 தொடரில் விரேந்திர சேவாக் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 பந்துகளை 304 பந்துகளில் எடுத்ததே முதலிடம் வகிக்கின்றது.

இந்தப் பட்டியலில் இரண்டாவதாக உள்ளதும் விரேந்திர சேவாகின் அதிகபட்ச ஸ்கோர்தான். 2009-10 தொடரில் இலங்கைக்கு எதிராக மும்பையில் 254 பந்துகளில் 293 ரன்களை விளாசியதை யாரேனும் மறக்க முடியுமா? முக்கியமாக முரளிதரன் மறக்க முடியுமா?

அடுத்த இடத்தில் கேப்டவுனில் 2015-16 தொடரில் பென் ஸ்டோக்ஸ் 198 பந்துகளில் 258 ரன்களை விளாசி தான் அந்த இங்கிலாந்து அணியைச் சேர்ந்த வீரர் அல்ல என்று தன் தனித்துவத்தை நிரூபித்த இன்னிங்ஸ் ஆகும். மீண்டும் அடுத்த பெரிய ஸ்கோர் குறைந்த பந்து பட்டியலில் லாகூரில் சேவாக் பாகிஸ்தானுக்கு எதிராக கிரெக் சாப்பல் கோச் ஆக இருந்த போது இந்திய அணிக்காக எடுத்த 247 பந்துகளில் 254 ரன்கள் உள்ளது. இவரும் திராவிடும் ஆடிக்கொண்டே இருந்தார்கள்.

ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடி ஒருவர் இருக்கிறார். அன்றைய தினம் லைவ் ஆக அந்த இன்னிங்ஸைப் பார்த்து இன்னும் கூட மிரண்டு போய் கிடக்கும் இன்னிங்ஸ், குறிப்பாக இங்கிலாந்து மறக்க முடியாத இன்னிங்ஸ். ஆம்! நியூசிலாந்தின் நேதன் ஆஸ்ட்ல் 168 பந்துகளில் 222 ரன்களை விளாசி கிறைஸ்ட் சர்ச்சில் 450 ரன்களுக்கும் மேலான இலக்கை ஏறக்குறைய வெற்றிகரமாக விரட்டி விடுவார் என்று நாற்காலி நுனியில் விரல் நகங்கள் காணாமல் போக டென்ஷனுடன் பார்த்த அந்த இன்னிங்சை மறக்க முடியுமா? இங்கிலாந்து கதி கலங்கிப் போனதைத்தான் மறக்க முடியுமா?

நேதன் ஆஸ்ட்ல் ஆடிய ஆட்டத்தை இன்று ஒரு கிரிக்கெட் பாணியாகவே மாற்றி விட்ட பிரெண்டன் மெக்கல்லமும் இந்த அதிரடி பட்டியலில் இருக்கிறார். 2014-ல் ஷார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் ஒன்றில் பிரெண்டன் மெக்கல்லம் 188 பந்துகளில் 202 ரன்களை விளாசினார். இந்த இன்னிங்ஸிற்கு ஒருமாதம் சென்று கிறைஸ்ட்சர்ச்சில் இலங்கையை புரட்டி எடுத்த பிரெண்டென் மெக்கல்லம் 134 பந்துகளில் 135 ரன்களை விளாசித்தள்ளினார். இந்தப் பட்டியலில் ஷிகர் தவானையும் நாம் விட்டு விட முடியாது கால்லே மைதானத்தில் 2017-ல் இலங்கைக்கு எதிராக 168 பந்துகளில் தவான் 190 ரன்களை எடுத்ததும் இந்தப் பட்டியலில் ஜொலிக்கும் பல ரத்தினங்களில் ஒன்று என்றே கூற வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x