Published : 26 Jul 2023 03:12 PM
Last Updated : 26 Jul 2023 03:12 PM

‘என் கரியரையே முடித்துவிட்டாய்!’ - கேட்சை விட்ட கோலியிடம் ஜாகீர் கான் சொன்னது இதுதானா?

கிரிக்கெட்டில் கேட்சை விடுவது என்பது மிகப்பெரிய ஒரு பாவச் செயலாக பார்க்கப்படுகிறது. யாரும் வேண்டுமென்று விடுவதில்லை. ஆனால், சில வேளைகளில் கேட்சை விட்ட பிறகு வாழ்வு கிடைத்த அந்த பேட்டர் சதம், இரட்டைச் சதம், ஏன் முச்சதமே எடுத்து விட்டால், அந்த கேட்சை விட்டதுதானே காரணம் என்று கேப்டன் மற்றும் பவுலர் கண் முன்னால் வந்து போகத்தானே செய்யும்?

கேட்சஸ் வின் மேட்சஸ் என்பது கிரிக்கெட்டின் மகா வாக்கியம். ஒரு முறை ஜாண்ட்டி ரோட்ஸ் பிடித்த நம்ப முடியாத சில கேட்ச்களினாலேயே ஒருநாள் போட்டி ஒன்றில் மே.இ.தீவுகளை வெற்றி கொண்டார். கேட்சை விட்டால் என்ன ஆபத்து என்பதை இப்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் பார்த்து வருகிறோம். ட்ராவிஸ் ஹெட்டிற்கு இங்கிலாந்து வீரர் கேட்சை விட அவர் சதமெடுக்க இங்கிலாந்துக்கு போட்டியே கையை விட்டு இன்று தொடரை வெல்ல முடியாமல் போனது. அதேபோல் ஸ்மித்துக்கும் விட்ட கேட்சினால் அவர் சதமெடுத்ததை இதே தொடரில் பார்த்தோம்.

ஆனால், பவுலர் கரியர் போகிறதென்றால், அது நிச்சயம் பெரிய தவறுதான். பங்கஜ் சிங் என்ற ராஜஸ்தான் பவுலர் படாதபாடு பட்டு இந்திய அணியில் இங்கிலாந்து தொடரில் இடம்பெற்றார். அருமையான பவுலர் அலிஸ்டர் குக் பிரமாதமான பார்மில் இருக்கும் சமயம். பங்கஜ் சிங் பந்தில் எட்ஜ் ஆக, கல்லியில் ஜடேஜா கேட்சை விட்டார். பங்கஜ் சிங் கரியர் காலியானது. ஒருவேளை ஜடேஜா அந்தக் கேட்சைப் பிடித்திருந்தால் பங்கஜ் சிங் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கொஞ்ச காலம் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்ற அவரது கனவை பூர்த்தி செய்து கொண்டிருப்பார். ஆனால், இன்று ஜடேஜா இந்திய அணியை விட்டு தூக்க முடியாத ஓர் இடத்தில் இருக்கிறார். அவரிடம் போய் பங்கஜ் சிங் என்று கேட்டால் நினைவிருக்குமோ இருக்காதோ. இதுதான் கிரிக்கெட். சக்சஸ் ஆனால் ஒரு விதம், ஆகாவிட்டால் வேறு விதம்!

2014-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு இந்தியா கிரிக்கெட் பயணம் மேற்கொண்டபோது ஒரு சம்பவம் நடந்தது. அதாவது நியூசிலாந்து கேப்டன் அதிரடி மன்னன் பிரெண்டன் மெக்கல்லம் கொடுத்த கேட்சை நல்ல பீல்டரான விராட் கோலியே கோட்டை விட்டார். இதன் பிறகு நடந்ததை கோலியினாலும் பாதிக்கப்பட்ட பவுலர் ஜாகீர் கானினாலும் கேப்டன் தோனியினாலும் கூட மறக்க முடியாது. ஏனெனில் பிரெண்டன் மெக்கல்லம் 302 ரன்கள் விளாசித் தள்ளிவிட்டார். இதனால் ஆட்டம் டிரா ஆனது.

இந்தச் சம்பவம் குறித்து ஜியோ சினிமாவின் இஷாந்த் சர்மா பகிர்ந்து கொண்டபோது, “விராட் கோலி கேட்சை விட்டதனால் பிரெண்டன் மெக்கல்லம் முச்சதம் அடித்தார். எனக்கு நினைவிருக்கின்றது. உணவு இடைவேளை வரும் சமயத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. விராட் கோலி நேராக வந்து ஜாகீர் கானிடம் விட்ட கேட்ச்சுக்காக மன்னிப்புக் கேட்டார். அதற்கு ஜாகீர் கானோ கோலியைத் தேற்றுமாறு ‘கவலைப்படாதே, லஞ்ச் முடிந்து அவரை அவுட் செய்து விடலாம்’ என்றார். 3-ம் நாள் ஆட்டத்தின் போதும் மெக்கல்லாம் 300 அடித்த பிறகு டீ டைமில் விராட் கோலி மீண்டும் ஒருமுறை ஜாகீர் கானிடம் சாரி என்றார். அதற்கு ஜாகீர் கான், ‘என் கிரிக்கெட் வாழ்க்கையையே முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாய்” என்றார். இவ்வாறு கூறியதாக இஷாந்த் சர்மா பகிர்ந்து கொண்டார்.

ஆனால், தான் அப்படிச் சொல்லவில்லை என்று உண்மையில் நடந்த உரையாடலை ஜாகீர் கான் தெரிவித்தார், “நான் என் கரியரை முடித்துவிட்டாய் என்று கூறவில்லை. நான் என்ன சொன்னேன் என்றால், ஒருமுறை விக்கெட் கீப்பர் கிரன் மோரே கேட்சை விட்டார். அன்று கிரகாம் கூச் முச்சதம் விளாசினார். இப்போது விராட் கோலி கேட்சை விட்டார் மெக்கல்லம் 300 அடித்து விட்டார் என்றேன். அதற்கு விராட் கோலி, என்னிடம், தயவு செய்து அப்படிப் பேசாதீர்கள் என்றார். அதாவது நான் அப்படிச் சொன்னது விராட் கோலியை வருத்தப்பட வைத்துவிட்டது. அதாவது கேட்சை விட்டதால் அவர் டிரிபில் செஞ்சுரி அடித்தார் என்ற பேச்சு கோலிக்குப் பிடிக்கவில்லை” என்றார் ஜாகீர் கான்.

அந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது வேறு கதை. அதில் அஜிங்கிய ரஹானே ஒரு சதம் எடுக்க, 2வது இன்னிங்ஸில் விராட் கோலி 105 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x