Published : 25 Jul 2023 04:22 PM
Last Updated : 25 Jul 2023 04:22 PM

ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி வெல்ல முடியாததற்கு அவர்களே காரணம்: கிளென் மெக்ரா

ஓல்ட் ட்ராபர்ட் டெஸ்ட் போட்டி துரதிர்ஷ்டவசமாக மழையால் 5-ம் நாள் ஆட்டம் முழுதும் நடைபெறாமல் போய் ட்ராவில் முடிய ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை தக்க வைத்துள்ளது. ஏனெனில் 5-வது கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றாலும் தொடர் 2-2 என்று டிரா ஆகும் என்பதால் ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்துவிட்டது. இந்நிலையில், மழைதான் காரணம் என்று பெரும்பாலானோர் கருத, ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ரா இங்கிலாந்து அணிதான் காரணம் என்று குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

ஓல்ட் ட்ராபர்ட் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்படைந்து 60 ஓவர்கள் போட முடியாமல் வீணானது. ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 214/5 என்ற் லபுஷேன் சதத்தினால் உயிர் பெற்றது. ஆனால், இங்கிலாந்து தங்கள் முதல் இன்னிங்சை இன்னும் கொஞ்சம் முன்னால் டிக்ளேர் செய்திருக்கலாம் என்கிறார் மெக்ரா. ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியில் மழை வரும் என்று எதிர்நோக்கி பென் ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்ஸை 400 ரன்கள் கூட எடுக்காமல் டிக்ளேர் செய்தார் பென் ஸ்டோக்ஸ். ஆனால், இந்த டெஸ்ட் போட்டியில் கடைசியில் ஜேம்ஸ் ஆண்டர்சனையும் பேர்ஸ்டோவையும் அதிக நேரம் ஆட விட்டு வேடிக்கைப் பார்த்துவிட்டார் பென் ஸ்டோக்ஸ்.

ஒன்று டிக்ளேரை தேவையில்லாமல் ஊருக்கு முன்னாடியே செய்து விடுவது, இல்லையெனில் தாமதம் செய்வது இந்தப் போக்குதான் இங்கிலாந்து வெற்றி பெற முடியாமல் போனதற்குக் காரணம். இதை மெக்ரா மட்டுமல்லாமல் பலரும் கூறிவரும் விமர்சனமே. இருப்பினும் மெக்ரா ஒரு பவுலராகப் பார்த்து பிபிசி ஊடகத்துக்கு கூறும்போது இதை சற்று இங்கிலாந்து பரிசீலித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது:

“டிக்ளேர் பற்றி யோசித்தோமானால், 3ம் நாள் ஆட்டத்தின்போது உணவு இடைவேளையின்போதே பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்திருந்தால் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும் கால நேரத்தில் இன்னும் ஒன்றிரெண்டு விக்கெட்டுகளைக் கூடுதலாக வீழ்த்தி 7 விக்கெட்டுகளை இங்கிலாந்து கைப்பற்றியிருக்கலாம். இங்கிலாந்து இந்த வாய்ப்பை ஏனோ தவற விட்டு, உணவு இடைவேளைக்குப் பிறகும் ஆடியது. இது அவர்களது விதியை முடித்துவிட்டது.

இங்கிலாந்து உண்மையிலேயே ஈவு இரக்கமற்ற கிரிக்கெட்டை ஆடியிருந்தால் அவர்கள் இந்நேரம் 3-0 என்று முன்னிலை வகித்திருப்பார்கள். ஆனால் இப்போது 1-2 என்று பின் தங்கிவிட்டார்கள். ஆஷஸ் தொடர் வெல்லும் வாய்ப்பும் பறிபோயுள்ளது” என்கிறார் மெக்ரா.

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் கூறும்போது , “2001-ம் ஆண்டுக்குப் பிறகு பென் ஸ்டோக்ஸ் அணி நிச்சயம் இங்கிலாந்தில் தொடரை இழக்கும் அணியாக இருக்கக் கூடாது. எனவே, ஓவல் டெஸ்ட் போட்டி மிக மிக முக்கியமான ஒன்றாகும். இங்கிலாந்து அணி 2-1 என்று பின் தங்கியிருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியாவை விட இங்கிலாந்து பெட்டர் டீம் என்றே தோன்றுகிறது.

ஆஸ்திரேலியாவை ஆதிக்கம் செலுத்தினார்கள், நல்ல கிரிக்கெட்டையும் ஆடினார்கள். இந்த ஓல்ட் ட்ராபர்ட் டெஸ்ட் போட்டியில் ஆடியது போல் ஆஸ்திரேலியா ஓவலில் ஆடினால் நிச்சயம் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து கவிழ்த்து விடும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x