Published : 30 Nov 2017 10:37 AM
Last Updated : 30 Nov 2017 10:37 AM

ஒரே இரவில் சிறந்த விளையாட்டு வீரராக முடியாது: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கருத்து

இரவோடு இரவாக யாரும் சிறந்த விளையாட்டு வீரராக முடியாது என்று டென்னிஸ் விராங்கனை சானியா மிர்சா கூறினார்.

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டின் 2-வது நாளான நேற்று விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸா பேசியதாவது:

விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பது மிகவும் அவசியம். அதிலும் புதிய விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதால், அவர்கள் நாட்டுக்கு பெருமை தேடித் தரும் சூழல் உருவாகும். இரவோடு இரவாக யாராலும் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக முடியாது. பெற்றோர், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அரசின் ஊக்குவிப்பு, அயராத உழைப்பு, தன்னம்பிக்கை போன்றவையே ஒரு சிறந்த விளையாட்டு வீரரை உருவாக்குகிறது. பாலிவுட் நடிகர்களின் பிரச்சாரங்களால்தான் விளையாட்டுத் துறை சாதிக்கிறது என்கிற வாதத்தை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். மேரி கோம் போன்றவர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு முன் எத்தனை பேருக்கு அவரைப் பற்றி தெரியும்?

இவ்வாறு சானியா மிர்சா பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேசியதாவது:

கிராமப் புறங்களில் பல விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இருந்தும் அவர்கள் ஏனோ வெளி உலகுக்கு தெரிவதில்லை. இவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கி இருப்பதால் விளையாட்டுத் துறையில் அவர்களால் தொடர்ந்து சாதிக்க முடிவதில்லை. விளையாட்டில் சாதிக்க நல்ல பொருளாதார சூழல் அவசியம் என்கிற நிலை மாற வேண்டும். அதனால் விளையாட்டு துறையில் வசதிகளை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு மிதாலி ராஜ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் பேசும்போது, “இந்திய இளைஞர்கள் தற்போது கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x