Published : 24 Jul 2023 09:13 AM
Last Updated : 24 Jul 2023 09:13 AM
டுனெடின்: உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது.
2023-ம் ஆண்டு உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டிகள் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குரூப் இ பிரிவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து, போர்ச்சுகல் அணிகளிடையிலான லீக் ஆட்டம் நேற்று டுனெடின் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி போர்ச்சுகல் அணியை வீழ்த்தினர். ஆட்டம் தொடங்கியதுமே, விறுவிறுப்பாக விளையாடிய நெதர்லாந்து 13-வது நிமிடத்திலேயே கோலடித்து முன்னிலை பெற்றது.
கார்னர் வாய்ப்பில் கிடைத்த பந்தை, அந்த அணி வீராங்கனை ஸ்டெபாயின் வான் டெர் கிராக்ட் பந்தை தலையால் முட்டி கோல்வலைக்குள் திணித்தார். இதையடுத்து நெதர்லாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து, கோல் அடிக்க போர்ச்சுகல் அணி வீராங்கனைகள் முயன்றனர். ஆனால் அதை நெதர்லாந்து வீராங்கனைகள் லாவகமாக தடுத்தனர். இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அபார வெற்றி பெற்றது.
இதுவரை குரூப் இ பிரிவில் அமெரிக்கா, நெதர்லாந்து அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. போர்ச்சுகல், வியட்நாம் அணிகள் தலா ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளன.
ஸ்வீடன் அபாரம்: குரூப் ஜி பிரிவில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் ஸ்வீடன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணியைத் தோற்கடித்தது.
ஸ்வீடன் தரப்பில் ஃபிரிடோலினா ரோல்போ 65-வது நிமிடத்திலும், அமண்டா லெஸ்டெட் 90-வது நிமிடத்திலும் கோலடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹில்டா மகாயா 48-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
பிரான்ஸ்-ஜமைக்கா டிரா: குரூப் எஃப் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரான்ஸ், ஜமைக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT