Published : 24 Jul 2023 09:20 AM
Last Updated : 24 Jul 2023 09:20 AM
சென்னை: ஆதம்பாக்கம் டிஏவி பள்ளி நிறுவனர் டாக்டர் எஸ்.வரதராஜன் நினைவு மாநில அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டியின் மகளிர் 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சாத்விகாவும், ஆடவர் 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சாய்சரணும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள டிஏவி பள்ளியில் இந்த மாநில அளவிலான செஸ் போட்டி கடந்த 2 நாட்களாக 8, 10, 12, 14, 18 வயதுக்குள்பட்டோர் ஆடவர், மகளிர் பிரிவில் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
இறுதிச் சுற்றின் முடிவில் மகளிர் 8, 10, 12, 14, 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முறையே எஸ்.சாத்விகா, எஸ்.ஸ்ரீநிகா, எஸ்.ஷன்மதி ஸ்ரீ, அனன்யா மணிசுந்தரம், எம்.சவும்யா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இதேபோல், ஆடவர் 8, 10, 12, 14, 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முறையே சாய்சரண், அனிஷ் ராம்குமார், சாய் அபினவ் குச்சிபோட்லா, எஸ்.ஹரிதேவ், எம்.கோகுல்வாஸ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
பரிசளிப்பு விழாவில், கிராண்ட்மாஸ்டர் அதிபன் பாஸ்கரன், ஆதம்பாக்கம் டிஏவி பள்ளித் தாளாளர் வி.ராஜேந்திரன், பள்ளி முதல்வர் ஜே. கீதா, டிஏவி பள்ளி கல்வி இயக்குநர் டி.கே.சாந்தம்மா, தமிழ்நாடு மாநில செஸ் சங்க இணைச் செயலர் கே.கணேசன், புளூம் செஸ் அகாடமி செயலர் எம்.ஏ.வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT