Published : 20 Nov 2017 05:35 PM
Last Updated : 20 Nov 2017 05:35 PM
கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நிறைய நாடகங்களுடன் நடந்தேறி கோலியின் அபாரமான சதம் மற்றும் புவனேஷ் குமாரின் பிரமாதப் பந்து வீச்சுடன் வெற்றிக்கான முயற்சியுடன் ஆடப்பட்டு கடைசியில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இலங்கை தன் 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் என்று போராடிய நிலையில் டிரா ஆனது.
முதல் இன்னிங்ஸில் 122 ரன்கள் முன்னிலை பெற்று கடைசியில் தோல்வியைத் தவிர்க்க போராட வேண்டிய நிலைக்கு இலங்கை அணி தள்ளப்ப்பட்டதற்குக் காரணம் கோலியின் சதமும் இந்திய வேகப்பந்து வீச்சும் என்றால் மிகையாகாது.
போதிய வெளிச்சமின்மை காரணமாக போதிய ஓவர்கள் இருந்தும் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது, கோலி நடுவரிடம் விசாரித்தார், பெரிய சர்ச்சை ஒன்றுமில்லை, உடனேயே நடுவருக்குக் கைகொடுத்தார், ஹெராத்துக்குக் கைகொடுத்து அவர் முதுகில் தட்டிக்கொடுத்தார், 5-ம் நாளில் நிகழ்ந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகள் கடைசியில் சமாதானத்துடன் முடிந்தது.
கோலியின் சதம் இல்லையெனில், அவர் ஒருவேளை தான் ஆடிய அந்த முதல் ரிஸ்க் ஷாட்டில் ஆட்டமிழந்திருந்தால், ஆட்டம் ஒருவேளை இலங்கைக்குச் சாதகமாக அமைந்திருக்கும், ஆனால் சஹா ஆட்டமிழந்தவுடன் விராட் கோலி எதிர்த்தாக்குதல் ஆட்டம் ஆடினார். முதல் 50 ரன்களை 80 பந்துகளில் எடுத்த விராட் அடுத்த 54 ரன்களை 39 பந்துகளில் விளாசி 50வது சதமெடுத்தார்.
இலங்கை அணிக்கு 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது, 40க்கும் மேற்பட்ட ஓவர்கள் இருந்தன, ஆனால் விராட் கோலியின் அதிநெருக்கடி கேப்டன்சி, அவர் எதிர்பார்ப்புக்கு இணங்கிய புவனேஷ் குமார், மொகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரது பந்து வீச்சு இலங்கை அணியை அதீதப் பதற்றத்துக்கு ஆளாக்கியது, ஆனாலும் தொடக்க வீரர்கள் அனாவசியமாக வெளியே சென்ற பந்தை சரியாக ஆடாமல் மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆக ஆட்டம் இந்தியா பக்கம் சாய்ந்தது.
கோலி முன்னதாகவே டிக்ளேர் செய்திருக்க வேண்டும் என்று அபத்தமாக சிலர் கருதக்கூடும் அவரது சதம் இல்லையெனில் இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க போராடியிருக்கும் என்பதே உண்மை. மேலும் மழையால் ஏகப்பட்ட ஓவர்களை இழந்த ஒரு டெஸ்ட் போட்டியை இந்த அளவுக்கு விறுவிறுப்பாகக் கொண்டு சென்றதற்காக விராட்கோலி பாராட்டுக்குரியவரானார். வேகப்பந்து வீச்சு பவுலர்களூம் பாராட்டுக்குரியவர்களே. குறிப்பாக புவனேஷ் குமார் 11 ஓவர்கள் வீசி அதில் 8 மெய்டன்களுடன் 8 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷமி 2 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பறிகொடுத்த 17 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே கைப்பற்றினர். இது உள்நாட்டில் அரிதான ஒரு விஷயமே.
சுரங்க லக்மல் அபாரப் பந்து வீச்சு:
இன்று காலை 171/1 என்று தொடங்கியது இந்திய அணி. சதமெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் 79 ரன்கள் எடுத்து ஆஃப் ஸ்டம்பில் ஃபுல் லெந்தில் பிட்ச் ஆகி உள்ளே வந்த பந்தை தவறாக பிளிக் ஆட முற்பட்டார் கால்காப்புக்கும் மட்டைக்கும் இடையே புகுந்து மிடில் ஸ்டம்பை தாக்கியது. காலை இன்னும் நன்றாக நீட்டி, நேர் பேட்டில் ஆடியிருந்தால் பந்து புகுந்திருக்காது.
அடுத்ததாக புஜாரா 22 ரன்கள் எடுத்த நிலையில் லக்மலின் பந்து ஒன்று அதிகமாக எழும்ப புஜாரா திகைத்தார். ஆனால் பந்து மட்டையின் மேல் பகுதியில் பட்டு கல்லியில் திலுருவனின் அருமையான கேட்சாக அமைந்தது, லக்மல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதே ஒவரில் அதிர்ச்சிக் காத்திருந்தது, ரஹானே இறங்கியவுடன் மிக அருமையாக லக்மல் அவருக்கு 3 ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி அவரை பின்னங்காலில் நிறுத்தினார், பிறகு ஒரு பந்தை ஃபுல் லெந்தில் உள்ளே கொண்டு வர ரஹானே கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆகி டக் அவுட் ஆனார். அனுபவசாலியான ரஹானே 3 ஷார்ட் பிட்ச் பந்துக்குப் பிறகு ஒரு ஃபுல் லெந்த் இன்ஸ்விங்கரையோ அவுட் ஸ்விங்கரையோ எதிர்பார்த்திருக்க வேண்டும்.
213/4 என்ற நிலையில் ஜடேஜா, கோலியுடன் இணைந்து ஸ்கோரை 249க்கு கொண்டு சென்றனர். ஜடேஜா 41 பந்துகள் நின்று ஒரு பவுண்டரியுடன் ஆடிய மந்தமான இன்னிங்ஸ் ஆஃப் ஸ்பின்னர் திலுருவன் பெரேரா மூலம் முடிவுக்கு வந்தது. கட் ஆட முடியாத பந்தை பின்னால் சென்று ஆடினார், ஆனால் கட் ஆடமுடியவில்லை ஏதோ செய்தார் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. உணவு இடைவேளையின் போது இந்திய அணி 251/5, விராட் கோலி 41 நாட் அவுட். அதன் பிறகு அஸ்வின் (7), சஹா (5) ஆகியோர் ஷனகாவிடம் வீழ்ந்தனர். புவனேஷ் குமார் 8 ரன்களில் கமகேவிடம் வீழ்ந்தார். ஷமி 12 ரன்கள் எடுக்க புதிய பந்து எடுத்தவுடன் கோலி அதிரடி ஆட்டம் ஆடி சதமெடுக்க இந்திய அணி 352/8 என்று டிக்ளேர் செய்தது.
லக்மல் 3 விக்கெட்டுகளையும், ஷனகா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
புவனேஷ்வர் குமார் அபாரம்; தோல்வியிலிருந்து தப்பிய இலங்கை அணி:
231 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆக்ரோஷமான இந்திய பந்து வீச்சை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதல் ஓவரின் கடைசி பந்தில் புவனேஷ்குமார் வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயான பந்தை சதீரா பஞ்ச் செய்ய முயன்று மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். உண்மையில் தேவையில்லாத ஷாட். அதே போல் ஷமி பந்திலும் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார் கருண ரத்னே. தேநீர் இடைவேளையின் போது இலங்கை 8/2.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு 7 ரன்கள் எடுத்த திரிமானே ஆட்டமிழந்தார். புவனேஷ் குமார் ரவுண்ட் த விக்கெட்டில் உள்ளே வரும் கோணத்தில் பந்தை வீசினார், ஆனால் பந்து அவ்வளவாக உள்ளே வரவில்லை, ஆடாமல் விட்டிருக்கலாம் ஆனால் ஆடினார் கல்லியில் ரஹானேயிடம் கேட்ச் ஆனது. மேத்யூஸ், உமேஷ் யாதவ்வை பவுண்டரி அடித்த அதே ஓவரில் பந்து ஒன்று சறுக்கிக் கொண்டு ஸ்டம்புக்கு நேராக வர கால்காப்பில் வாங்கினார் மேத்யூஸ், நடுவர் நாட் அவுட் என்றா, கோலி ரிவியூ செய்தார், மிகச்சரியான ரிவியூ, இலங்கை 22/4.
சந்திமால், டிக்வெல்லா இணைந்தனர், டிக்வெல்லா, மொகமது ஷமியை இலக்கு வைத்து அடித்தார், முதலில் ஷார்ட் பிட்ச் பந்து ஒன்றை லாங் லெக்கில் ஹூக் செய்து அபாரமான சிக்சரை அடித்தார், பிறகு ஆஃப் ஸ்ட்ம்புக்கு வெளியேயான பந்தை டி20 பாணியில் நகர்ந்து சென்று ஸ்டம்புகளுக்குப் பின்னால் சென்று லெக்திசையில் ஒரே தூக்குத் தூக்கினார் சிக்ஸ் ஆனது.
பிறகு தேவையில்லாமல் காலத்தை விரயம் செய்யும் நோக்கத்துடன் ஷமி ஓடிவரும்போது அவரை ஓரிருமுறை நிறுத்தினார், இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதற்கிடையே ஒரு பந்து எட்ஜ் ஆகி ஸ்லிப்புக்கு முன்னால் பிட்ச் ஆகிச் சென்றது, ஷமி பந்தில் தப்பினார் டிக்வெல்லா. இருவரும் இணைந்து 47 ரன்களை சேர்த்தனர். சந்திமால் 20 ரன்கள் எடுத்த நிலையில் மொகமது ஷமி ஒரு பந்தை அருமையாக குட் லெந்த்திலிருந்து உள்ளே கொண்டுவர லெக் திசையில் பிளிக் செய்யும் தவறான முயற்சியில் பவுல்டு ஆனார். டிக்வெல்லாவும் 27 ரன்களில் புவனேஷ்குமாரின் பந்தை நகர்ந்து பிளிக் ஆடமுயன்று எல்.பி.ஆகி வெளியேறினார்.
கடைசியாக திலுருவன் பெரேரா, புவனேஷ் குமாரிடம் பவுல்டு ஆனார். வைடு ஆஃப் த கிரீசிலிருந்து உள்ளே பந்தை செலுத்தி பிறகு லேசாக பந்து நேராக ஆஃப் ஸ்டம்பைத் தாக்கியது, மிக அருமையான பந்து இலங்கை அணி 69/7 என்ற நிலையிலிருந்து ஷனகா, ஹெராத் க்ரீசில் இருக்க 75/7 என்ற நிலையில் போதிய வெளிச்சமின்னை கோரல் ஏற்றுக் கொள்ளப்பட்டது, ஆட்டம் டிரா. ஆட்ட நாயகனாக மிகச்சரியாக புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT