Published : 22 Jul 2023 01:33 PM
Last Updated : 22 Jul 2023 01:33 PM

பும்ரா பழைய தீவிரத்துடன் பந்து வீசுகிறார்... ராகுல், ஷ்ரேயஸ், பந்த் பேட்டிங் பயிற்சி - பிசிசிஐ அப்டேட்

பந்த், ராகுல், பும்ரா, ஷ்ரேயஸ்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ள புதிய மருத்துவ செய்தியின்படி, காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வலைப்பயிற்சியில் தீவிரமாக பந்து வீசி வருவதாகவும், அதேபோல் காயமடைந்த கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பந்த் ஆகியோரும் மறு புனரமைப்பு கால சிகிச்சையினூடாக வலையில் பேட்டிங் பயிற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

காயமடைந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் பிராக்சரிலிருந்து மீண்டு வலையில் பந்து வீசி வருவதாக பிசிசிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பும்ரா, பிரசித் கிருஷ்ணா இருவருமே முழு தீவிரத்துடன் பந்து வீசுவதாக பிசிசிஐ கூறியுள்ளது. அடுத்ததாக, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி (என்சிஏ) ஏற்பாடு செய்யும் சில பயிற்சிப் போட்டிகளில் பும்ராவும், பிரசித் கிருஷ்ணாவும் பங்கேற்க உள்ளனர்.

வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு உடற்கூறு மருத்துவரின், பயிற்றுநரின் மேற்பார்வையில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா இருவரும் பயிற்சிப் போட்டிகளில் ஆடுவார்கள். நேரடியாக மண்டலங்களுக்கு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட தியோதர் டிராபியில் அவரைக் களமிறக்குவதற்குப் பதிலாக இந்த பயிற்சி ஆட்ட முறை பயனளிக்கும் என்று கூறுகின்றனர்.

என்சிஏ நடத்தும் இந்தப் பயிற்சி ஆட்டங்களில் பும்ரா தேறி விட்டால் நேரடியாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பார். அதாவது ஆகஸ்ட் 18 முதல் 23ம் தேதி வரை நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா ஆட வாய்ப்புள்ளது. அயர்லாந்து தொடருக்குப் பிறகு இந்திய அணி ஆகஸ்ட் 30 முதல் செப்.17 வரை ஆசியக் கோப்பை போட்டிகளில் ஆடுகிறது. செப்டம்பர் இறுதியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவில் நடைபெறும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது இந்திய அணி. அக்டோபர் 5ம் தேதி ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடங்குகின்றது.

ராகுல், ஷ்ரேயஸ், ரிஷப் பந்த்: தொடை காயம் அடைந்த ராகுல் மற்றும் முதுகுக் காயம் அடைந்த ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோரும் மீண்டு வருகின்றனர். இவர்கள் தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதோடு உடல்கட்டுக்கோப்பு பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கார் விபத்தில் உயிர் தப்பி முழங்கால் லிகமண்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டு மீண்டு வரும் ரிஷப் பந்த் ‘குறிப்பிடத்தக்க முன்னேற்றம்’ கண்டு வருகிறார் என்று பிசிசிஐ அறிக்கை கூறுகிறது. வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்வதோடு விக்கெட் கீப்பிங்கும் செய்யத் தொடங்கியுள்ளார் ரிஷப் பந்த். இவருக்கும் பயிற்சி முறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, அதையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.

ஆகவே விரைவில் முழு இந்திய அணியைக் காணலாம், குறிப்பாக உலகக் கோப்பைக்குள் பும்ரா, ஷ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியரோ அணிக்கு வர வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x