Published : 19 Jul 2023 02:11 PM
Last Updated : 19 Jul 2023 02:11 PM

பிராட்மேனுக்கு அடுத்து சிறந்த சராசரி 98.50 - பாகிஸ்தான் வீரர் சாவுத் ஷகீல் இரட்டைச் சத சாதனை!

சாவுத் ஷகீல்

டெஸ்ட் கிரிக்கெட்டின் பிதாமகன் என்று கருதப்படும் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனின் சராசரி 99.99. இதை இதுவரை யாரும் கடக்க முடியவில்லை. இந்தச் சராசரிக்கு அருகில் வந்துள்ளார் பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சாவுத் ஷகீல். இவர் இலங்கைக்கு எதிராக காலேயில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் 208 ரன்களைக் குவித்தார்.

இதன் மூலம் அவரது சராசரி 98.50-க்கு உயர்ந்து டான் பிராட்மேனை நெருங்குவதோடு, இலங்கை மண்ணில் இரட்டைச் சதம் விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார். இடது கை வீரரான சாவுத் ஷகீலின் வயது 27. இவர் கராச்சியில் பிறந்தவர். தன் 6-வது டெஸ்ட் போட்டியில் ஆடும் அவர் அணியின் பேட்டிங் வரிசையில் 5-ம் நிலை வீரராக இறங்கினார். அப்போது பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ரன்கள் என தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தது. இவர் இறங்கி 19 பவுண்டரிகளுடன் 361 பந்துகளில் 208 ரன்கள் எடுத்து கடைசி வரையில் வீழ்த்த முடியாமல் இருந்தார்.

பாகிஸ்தான் அணி இலங்கையின் 312 ரன்கள் முதல் இன்னிங்ஸ் ஸ்கோருக்கு எதிராக 461 ரன்கள் குவித்தது. அதன் மூலம் 149 ரன்கள் முன்னிலை பெற்றது. இதில் சாவுத் ஷகீலின் இன்னிங்ஸ் பெரும்பங்கு வகித்தது. மற்றொரு முனையில் சல்மான் 113 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து 9 பவுண்டரிகள், 1 சிக்சருடன் அதிரடி காட்டினார்.

இதற்கு முன்னர் 5 டெஸ்ட் போட்டிகளில் 72.50 என்ற சராசரியில் இருந்த ஷகீல், இந்தச் சாதனை இரட்டைச் சதத்தை அடுத்து 98.50 என்ற சராசரியை எட்டினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை அவர் எடுத்துள்ள ரன்கள்: 37, 76, 63, 94, 23, 53, 22, 55* (நாட் அவுட்), 125*, 32, 208*. ஆனால், மற்றொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும் இப்போதுதான் பாகிஸ்தானுக்கு வெளியே ஆடி சதம் எடுத்துள்ளார். அதுவும் இரட்டைச் சதமாக அமைந்தது.

இதற்கு முன்னர் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் ஆடித்தான் இந்த ரன்களை எடுத்துள்ளார். மேலதிக சவால் என்னவென்றால் இவர் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டு ஆடுகலங்களில் ஆடும்போதுதான் உண்மையான திறமை தெரியவரும்.

இப்போது 6 டெஸ்ட் போட்டிகளில் 788 ரன்களைக் குவித்து 98.50 என்ற சராசரியில் உள்ளார். முகமது ஹபீஸ்தான் இலங்கையில் அதிக ஸ்கோர் எடுத்த பாகிஸ்தான் வீரராக இருந்தார். ஹபீஸ் கொழும்பு டெஸ்ட் போட்டியில் 2012-ம் ஆண்டில் 196 ரன்கள் எடுத்த சாதனையை இப்போது ஷகீல் தகர்த்துள்ளார்.

149 ரன்கள் பின்னிலை கண்டுள்ள நிலையில், இலங்கை அணி தன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நான்காம் நாள் ஆட்டத்தின் உணவு நேர இடைவேளை முடிந்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தோல்வியைத் தவிர்க்க இலங்கை கடுமையாகப் போராட வேண்டி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x