Published : 19 Jul 2023 01:08 PM
Last Updated : 19 Jul 2023 01:08 PM

ODI WC 2023 | இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் செயல்பட வாய்ப்பு

கே.எல்.ராகுல் | கோப்புப்படம்

மும்பை: எதிர்வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக கே.எல்.ராகுல் செயல்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், கடந்த ஆண்டு விபத்தில் சிக்கிய காரணத்தால் உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாட முடியாத சூழல் நிலவுகிறது.

வரும் செப்டம்பர் 5-ம் தேதி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்கள் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த உத்தேச பட்டியலை சமர்பிப்பதற்கான கெடு தேதி என தெரிகிறது. அதிலிருந்து தொடர் தொடங்குவதற்கு ஒரு வார காலத்துக்கு முன்பு அணியில் மாற்றம் இருந்தால், அதற்கு ஐசிசி டெக்னிக்கல் குழுவின் அனுமதி அவசியம் என சொல்லப்பட்டுள்ளது.

31 வயதான ராகுல், ஐபிஎல் 2023 சீசனின் போது காயமடைந்தார். தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது உடற்திறனை மேம்படுத்தும் வகையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ராகுல் முகாமிட்டுள்ளார். அவர் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல். எதிர்வரும் ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் அவர் அணியில் விளையாடுவார் என தெரிகிறது.

அதனால், ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மெட்டில் அணியில் மற்றொரு விக்கெட் கீப்பராக உள்ள கே.எல்.ராகுல், உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என தெரிகிறது. அவருக்கு பேக்-அப் விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் இருப்பார்கள் என பிசிசிஐ வட்டாரத்தில் பேசி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகக் கோப்பை தொடருக்கான அணி தொடர்பாக பயிற்சியாளர் ராகுல் திராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஆலோசனை நடத்த பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x