Published : 19 Jul 2023 08:14 AM
Last Updated : 19 Jul 2023 08:14 AM
காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சவுத் ஷகீல் விளாசிய சதத்தால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது.
காலே நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 95.2 ஓவர்களில் 312 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தனஞ்ஜெயா டி சில்வா 122 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 45 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 101 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்தது.
அந்த சூழ்நிலையில் சவுத் ஷகீல், அகா சல்மான் ஜோடி சிறப்பாக விளையாடிய 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்ததால் பாகிஸ்தான் அணி சரிவில் இருந்து மீண்டது. சவுத் ஷகீல் 69, அகா சல்மான் 61 ரன்களுடன் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினார்கள். அகா சல்மான் 113 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்த நிலையில் ரமேஷ் மெண்டிஸ் பந்தில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
சவுத் ஷகீலுடன் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 177 ரன்கள் சேர்த்தார் அகா சல்மான். இதையடுத்து நோமன் அலி களமிறங்கினார். சவுத் ஷகீல் 129 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் தனது 2-வது சதத்தை விளாசினார். அவரது சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 70-வது ஓவரில் 312 ரன்களை கடந்து முன்னிலை பெற தொடங்கியது. தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய நோமன் அலி 57 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் ரமேஷ் மெண்டிஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
இதையடுத்து களமிறங்கிய ஷாகீன் ஷா அப்ரீடி 9 ரன்களில் விஸ்வா பெர்னாண்டோ பந்தில் நடையை கட்டினார். 346 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்த போதிலும் சவுத் ஷகீல் நிதானமாக விளையாடி அணியின் முன்னிலையை சீராக உயர்த்தினார். அவருக்கு உறுதுணையாக நசீம் ஷா தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். தேநீர் இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 95 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 389 ரன்கள் குவித்திருந்தது. சவுத் ஷகீல் 254 பந்துகளில், 15 பவுண்டரிகளுடன் 161 ரன்களும், நசீம் ஷா 1 ரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT