Published : 16 Jul 2023 06:09 AM
Last Updated : 16 Jul 2023 06:09 AM

அஸ்வின் சாதனை மேல் சாதனை...

டொமினிகா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 141 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை இந்திய அணி பெற்றது. அஸ்வின் அபாரமாக பந்துவீசி 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்களைச் சாய்த்தார்.

மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள டொமினிகாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிமுதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதை தொடர்ந்து விளையாடிய இந்தியஅணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 113 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்திருந்து.

நேற்று முன்தினம் 3-வது நாள் ஆட்டத்தை யஷஸ்வி ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், விராட் கோலி 36 ரன்களுடனும் தொடங்கினர்.

தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 150 ரன்களைக் கடந்தார். அவர் 171 ரன்கள் எடுத்திருந்தபோது அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சில், கீப்பர் ஜோஷுவாடசில்வாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 16 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும். பின்னர் வந்த அஜிங்க்ய ரஹானே 3 ரன்களில் வீழ்ந்தார். 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலியும், ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோர் 400-ஐத் தாண்ட உதவினர். 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட்கோலி, கார்ன்வால் பந்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதன்மூலம் இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஜடேஜா 37 ரன்களும், இஷான் கிஷன் ஒரு ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

பின்னர் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. அஸ்வின், ரவீந்திர ஜடேஜா சுழலில் சிக்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அந்த அணியில் அதிகபட்சமாக அத்தானாஸ் 28 ரன்கள் குவித்தார். பிராத்வெயிட் 7, டேக்நரைன் சந்தர்பால் 7, ரேமன் ரீஃபர் 11, ஜோஷுவா ட சில்வா 13, அல்ஸாரி ஜோசப்13, வாரிக்கன் 18 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர். ஜேசன் ஹோல்டர் மட்டும் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 130 ரன்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தானவெற்றியைப் பெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்களை சாய்த்தார். ஜடேஜா 2, மொகமது சிராஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து இந்திய அணி இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

3-வது இடத்தில்...: இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறந்த பந்துவீச்சு வரிசையில் அஸ்வினின் இந்த 12 விக்கெட் வேட்டை 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் 1988-ல் சென்னையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிராக நரேந்திர ஹிர்வாணி 16 விக்கெட் வீழ்த்தி (136 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார். 1975-ல் சென்னையில் இந்தியாவுக்கு எதிராக மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர் ஆன்டி ராபர்ட்ஸ் 12 விக்கெட் (121 ரன்கள்) வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார். இந்தவரிசையில் அஸ்வின் 3-வது இடத்தில் உள்ளார். மால்கம் மார்ஷல் 4-வது இடத்திலும் (11 விக்கெட், 89 ரன்கள்), 5-வது இடத்தில் வெஸ் ஹாலும் (11 விக்கெட், 126 ரன்கள்) உள்ளனர்.

5-வது சிறந்த இன்னிங்ஸ் வெற்றி: ஆசியாவுக்கு வெளியே இந்திய அணியின் சிறந்த இன்னிங்ஸ் வெற்றி வரிசையில் 5-வது இடத்தில் இந்த வெற்றி அமைந்துள்ளது. ஏற்கெனவே 1978-ல் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு இன்னிங்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்திலும், 2002-ல் ஹெட்டிங்லியில் இங்கிலாந்துக்கு எதிராக இன்னிங்ஸ், 46 ரன்கள் வித்தியாசத்திலும், 2005-ல்
புலவாயோவில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக இன்னிங்ஸ், 90 ரன்கள் வித்தியாசத்திலும், 2016-ல் நார்த் சவுண்டில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இன்னிங்ஸ், 92 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.

சாதனை மேல் சாதனை...

> டொமினிகா டெஸ்டில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள், 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் என மொத்தம் 12 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த டெஸ்டில் மேலும் பல சாதனைகளுக்கு அவர் சொந்தகாரராக மாறியுள்ளார்.

> இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் 4-வது இடத்தில் அஸ்வின் (72 விக்கெட்கள்) உள்ளார். முதலிடத்தில் கபில் தேவ் (89 விக்கெட்கள்), 2-வது இடத்தில் மால்கம் மார்ஷல் (76 விக்கெட்கள்), 3-வது இடத்தில் அனில் கும்ப்ளே (74 விக்கெட்கள்) ஆகியோர் உள்ளனர்.

> டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 8-வது முறையாக 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் அவர் அனில் கும்ப்ளேயின் சாதனையை சமன் செய்துள்ளார். அவர் தனது 93-வது டெஸ்டில் இந்த சாதனையை தொட்டார். கும்ப்ளே 132 டெஸ்டில் விளையாடி 8 முறை 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.

> அதிக முறை 10 விக்கெட் எடுத்த வீரர்களில் கும்ப்ளேவுடன் இணைந்து அஸ்வின் 5-வது இடத்தில் உள்ளார். முத்தையா முரளிதரன் (இலங்கை) 22 முறையும், ஷேன் வார்ன் (ஆஸ்திரேலியா) 10 தடவையும், ரிச்சர்ட் ஹாட்லி (நியூஸிலாந்து), ரங்கனா ஹெராத் (இலங்கை) தலா 9 முறையும் 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்து முறையே முதல் 4 இடங்களில் உள்ளனர்.

> ஒரு இன்னிங்ஸில் 34-வது முறையாக 5 விக்கெட்டுக்கு மேல்அஸ்வின் எடுத்துள்ளார். இதன் மூலம் ரங்கனா ஹெராத்துடன் அவர் இணைந்துள்ளார். முரளிதரன் 67 முறையும், வார்னே 37 முறையும், ஹாட்லி 36 முறையும், கும்ப்ளே 35 முறையும் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளனர். இந்த வரிசையில் அஸ்வின் 5-வது இடத்தில் உள்ளார்.

> மேலும் அஸ்வின் 6-வது தடவையாக இரண்டு இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார். முரளிதரன் (11), ஹெராத் (8) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் அவர் இருக்கிறார்.

> அஸ்வின் 2-வது இன்னிங்ஸில் 71 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார். மேற்கு இந்தியத் தீவுகளில் இந்திய வீரர்களின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். இதற்கு முன்பு 2016-ல் இஷாந்த் சர்மா 83 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றியதே சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி. யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடினார். அதைப் போலவே ரவிச்சந்திரன் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் அபாரமாக பந்துவீசி வெற்றி தேடித் தந்தனர். - ரோஹித் சர்மா, இந்திய அணி கேப்டன்.

நாங்கள் மோசமாக விளையாடி எங்கள் நிலையை நாங்களே தாழ்த்திக் கொண்டோம். நாங்கள் எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை. பேட்டிங், பவுலிங் எதுவுமே கைகொடுக்கவில்லை. இந்திய அணியினர் மிகச் சிறப்பாக விளையாடினர். அபாரமாக பந்துவீசி எங்களை கட்டுக்குள் வைத்தனர். - கிராக் பிராத்வெயிட், மேற்கு இந்தியத் தீவுகள் அணி

தெரியுமா...: இந்திய கிரிக்கெட் அணிக்கு 21 வயதிலேயே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டவர் மொகமது மன்சூர் அலி கான் பட்டோடி. டைகர் பட்டோடி என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர், டெஸ்ட் போட்டிகளில் 2,793 ரன்களும், முதல் தர போட்டிகளில் 15,425 ரன்களும் குவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x