Published : 16 Jul 2023 12:30 AM
Last Updated : 16 Jul 2023 12:30 AM
நியூயார்க்: அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி, அமெரிக்காவில் உள்ள இன்டர் மியாமி கால்பந்தாட்ட கிளப் அணியில் இணைந்துள்ளது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்சிலோன அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வந்த லயோனல் மெஸ்ஸி அந்த அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறினார். தொடர்ந்து பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிக்காக இரு ஆண்டுகளுக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த வாரம் அவரது ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பிஎஸ்ஜி அணியில் இருந்து விலகினார்.
இதனால் அவர், எந்த அணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு உலக கால்பந்து ரசிகர்களிடையே எழுந்தது. இது ஒருபுறம் இருக்க அவர், மீண்டும் தனது பழைய அணியான பார்சிலோனா அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனை அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி, பார்சிலோனா அணி தலைவர் ஆகியோர் கிட்டத்தட்ட உறுதி செய்தனர். அதே நேரத்தில் சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் அணி மற்றும் அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப் அணிகளும் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் இன்டர் மியாமி அணியை தேர்வு செய்துள்ளார் மெஸ்ஸி.
கடந்த மாத தொடக்கத்தில் இதனை உறுதிப்படுத்திய மெஸ்ஸி, “நான் இன்டர் மியாமி அணியில் இணைகிறேன். இந்த முடிவு 100 சதவீதம் உறுதி. பணம் தான் முக்கியம் என்றால் நான் சவுதி அரேபியாவின் கிளப்பில் இணைந்திருப்பேன். ஆனால், உண்மை என்னவென்றால் எனது எண்ணம் வேறானதாக உள்ளது. அது பணம் சார்ந்தது அல்ல” என்றார்.
தற்போது இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மெஸ்ஸி தங்கள் அணியில் இணைந்ததை இன்டர் மியாமி கிளப் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
வரும் 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் 2022 உலகக் கோப்பையை வென்ற மெஸ்ஸி, அமெரிக்க நாட்டின் கிளப் அணிக்காக விளையாடுவது கால்பந்து விளையாட்டுக்கு புதிய பாய்ச்சலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sí, Muchachos pic.twitter.com/8E3f9hb9VU
— Inter Miami CF (@InterMiamiCF) July 15, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT