Published : 15 Jul 2023 02:54 AM
Last Updated : 15 Jul 2023 02:54 AM
டொமினிகா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து, முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார். இதன்பின் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியது. நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி சதமடித்தனர். ரோகித் சர்மா 103 ரன்களுக்கு அவுட் ஆன பின்பு ஷுப்மான் கில் 5 ரன்னோடு வெளியேறினார்.
இத்தபின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 143 ரன்கள், விராட் கோலி 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனிடையே, 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 171 ரன்களில் அவுட்டானார். மறுமுனையில் விராட் கோலி 76 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், கோலி ஜோடி 110 ரன்கள் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்களே எடுத்தது. இறுதியில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அப்போது இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதன்பின் இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அஸ்வின் தனது சுழலால் மீண்டும் சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். அந்த அணி 8 ரன்கள் எடுத்தபோது முதல் விக்கெட்டை வீழ்த்திய ஜடேஜா, சில நிமிடங்களில் இரண்டாவது விக்கெட்டையும் எடுத்தார். இதன்பின் அஸ்வின் தனது விக்கெட் வேட்டையை தொடர வெஸ்ட் இண்டீஸ் சீரான இடைவெளியில் வீழ்ந்தது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் யாரும் நிற்க தவற, 130 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதன்பின் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. அஸ்வின் 7 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். இதேபோல் ஜடேஜா 2 விக்கெட், சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தனர். இந்த டெஸ்டின் ஆரம்பம் முதல் இந்திய அணியின் ஆதிக்கம் இருந்த நிலையில் 3வது நாளிலேயே வெற்றிபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT