Published : 15 Jul 2014 04:22 PM
Last Updated : 15 Jul 2014 04:22 PM
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கூர்மையாக அவதானித்து வரும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல, தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து கீழிறங்க இதுவே சரியான தருணம் என்று கூறியுள்ளார்.
மேலும், விராட் கோலிக்கு டெஸ்ட் கேப்டன் பொறுப்பை அளிக்க வேண்டும் என்று கூறும் அவர், தோனி அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் உத்வேகப்படுத்த ஒன்றுமே செய்யவில்லை என்று சாடியுள்ளார்.
"தோனி கேப்டன் பொறுப்பை உதற இதுவே சரியான தருணம். விராட் கோலி கேப்டனாக்கப்படவேண்டும் என்று நான் கருதுகிறேன்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது:
டெஸ்ட் கேப்டன்சி கோலியின் பேட்டிங்கை பாதிக்காது ஏனெனில் அவர் பலமான மனநிலை படைத்தவர், தன்னம்பிக்கை மிக்க கிரிக்கெட் வீரர். 27 வயதிலிருந்து 30- 32 வயது வரை ஒரு வீரர் தனது கிரிக்கெட் கரியரின் உச்சத்திற்குச் செல்லும் தருணம் ஆகவே இப்போதே அவரிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைப்பது சிறந்தது. அவருக்கு 32 அல்லது 33 வயதாகும்போது கேப்டன் பொறுப்பு கொடுப்பது பயனளிக்காது.
நிச்சயம் தோனி ஒரு சிறந்த டெஸ்ட் கேப்டன் கிடையாது. அவர் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருக்கலாம். கோலியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைப்பதில் எந்த வித பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்திய அணித் தேர்வாளர்கள் ஆஸ்திரேலியா போல் வலுவாக இருப்பதில்லை, அவர்கள் ஒருவர் ஓய்வு பெறும் வரை காத்திருக்கிறார்கள். அதாவது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களில் 4- 0 என்று தோற்ற பிறகு ஆஸ்திரேலியாவாக இருந்தால் அவர் கேப்டனாக இருந்திருக்க முடியாது. அணியை உத்வேகப்படுத்த அவர் ஒன்றுமே செய்யவில்லை.
தோற்பது நடக்கவே செய்யும் ஆனால் அது பிரச்சினையல்ல, ஆனால் கடுமையாகப் போராடித் தோற்கவேண்டும். தோனி அதனைச் செய்வது போல் எனக்குத் தெரியவில்லை. கேப்டனாக அவர் அணிக்கான தனது பயனை இழந்து விட்டார் என்றே நான் கருதுகிறேன். எனவே அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து இறங்குவது இந்திய கிரிக்கெட்டிற்கு நல்லது” என்று கடுமையான கருத்தை விமர்சனமாக முன் வைத்துள்ளார் இயன் சாப்பல்.
டிரா ஆன முதல் டெஸ்ட் பற்றி அவர் கூறுகையில்: "அணித் தேர்வு தவறானது. அணிச்சேர்க்கையை சரியாகச் செய்யவில்லையெனில் வெற்றி வாய்ப்பு ஒரு போதும் கைகூடாது. அஸ்வினை எப்படி உட்கார வைக்க முடிந்தது? ஸ்டூவர்ட் பின்னி பவுலர் அல்ல, மேலும் அவர் 8ஆம் நிலையில் களமிறங்குகிறார். அஸ்வினும் நன்றாக பேட் செய்யக்கூடியவர் மேலும் பின்னியைக் காட்டிலும் சிறப்பாக வீசக்கூடியவர். ரவீந்திர ஜடேஜாவை விடவும் அஸ்வின் சிறந்த பவுலர். ஆகவே அணித் தேர்வு முறையை சரியாக இந்தியா கடைபிடிக்க வேண்டும்.
லார்ட்ஸ் மைதானம், ஸ்பின்னர்களுக்கு உதவாது. எனவே நானாக இருந்தால் பின்னி, ஜடேஜா இருவரையும் நீக்கிவிட்டு, அஸ்வின், ரோகித் சர்மாவை அணியில் சேர்ப்பேன். இப்படிச் செய்தால் இந்திய அணிக்கு நல்ல பேலன்ஸ் கிடைக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT