Published : 13 Jul 2023 10:00 AM
Last Updated : 13 Jul 2023 10:00 AM
டொமினிகா: சர்வதேச கிரிக்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது இந்தியராகி உள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் இந்த சாதனை மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, விளையாடி வருகிறது. இரு அணிகளும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகின்றன. நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. தொடர்ந்து இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்து முதல் நாள் ஆட்டத்தை நிறைவு செய்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஆல் அவுட் செய்ததில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பங்கு அதிகம். மொத்தம் 24.3 ஓவர்கள் வீசி 60 ரன்கள் கொடுத்து, 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார் அஸ்வின். இதில் 6 ஓவர்கள் மெய்டன் ஓவர்களாகும். அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பால் மற்றும் அவரது மகனும், தற்போதைய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடி வரும் டஜ்நரைன் (Tagenarine) சந்தர்பால் விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
முதல் இன்னிங்ஸில் பிராத்வெயிட், சந்தர்பால் ஜூனியர், அலிக் அதனேஸ், அல்சாரி ஜோசப், ஜோமல் ஆகியோரது விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். இதில் அல்சாரி ஜோசப் விக்கெட்டை வீழ்த்தியபோது சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர் என்ற சாதனை மைல்கல்லை அவர் எட்டினார். இதற்கு முன்னர் இந்திய அணிக்காக விளையாடிய வீரர்களில் அனில் கும்ப்ளே (956 விக்கெட்டுகள்), ஹர்பஜன் சிங் (711 விக்கெட்டுகள்) இந்த சாதனையை எட்டியுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின்: 36 வயதான அஸ்வின் கடந்த 2010-ல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 93 டெஸ்ட், 113 ஒருநாள் மற்றும் 65 டி20 என சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதன் மூலம் இதுவரையில் 702 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 பவுலர் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள ஆல் ரவுண்டர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,129 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 13 அரைசதம் மற்றும் 5 சதங்கள் அடங்கும்.
Ashwin becomes first Indian spinner to take wickets of both father and son (Shivnarine and Tagenarine) in test matches during India vs West Indies test. #WIvsIND #INDvWIpic.twitter.com/ORJrNMUIzL
— Silly Context (@SillyContext) July 12, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT