Published : 11 Jul 2023 11:42 PM
Last Updated : 11 Jul 2023 11:42 PM

கோப்பை இல்லை என்றாலும், சிஎஸ்கேவுக்கு அடுத்து ஆர்சிபிதான் - ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு விவரம்

மும்பை: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல்-லின் (IPL) தனித்த பிராண்ட் மதிப்பு 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. 2022-ல் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் ஒரே வருடத்தில் 80% மதிப்பு அதிகரித்தன் காரணமாக இந்த நிலையை எட்டியுள்ளது.

அதேபோல், ஐ.பி.எல் அணிகளின் வணிக மதிப்பு (Enterprise Valuation) 15.4 பில்லியன் டாலர் என்று உயர்ந்துள்ளது. 2022ல் இது 8.5 பில்லியன் டாலர் என்று இருந்தது. 2023-2027 ஆண்டுக்கான ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமை அதிக தொகைக்கு போனதன் காரணமாக இந்த மதிப்பை ஐபிஎல் எட்டியது குறிப்பிடத்தக்கது. அதன்படி, புகழ்பெற்ற பார்முலா ஒன் நிறுவனத்தின் மதிப்பைவிட (17.1 பில்லியன் அமெரிக்க டாலர்) ஐ.பி.எல் நிறுவனத்தின் மதிப்பு சற்றே குறைவுதான்.

நியூயார்க்கை தளமாக கொண்ட சர்வதேச முதலீட்டு வங்கியான ஹௌலிஹான் லோகி இங்க் (Houlihan Lokey Inc) வெளியிட்ட ஆய்வு முடிவுகளில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. இதே ஆய்வில், பிராண்ட் தரவரிசை மற்றும் வணிக நிறுவன மதிப்பின் அடிப்படையில் ஐ.பி.எல் அணிகளின் வரிசையும் சொல்லப்பட்டுள்ளது.

அந்தவகையில், இந்த ஆண்டு கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் இதிலும் முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸின் மதிப்பு 212 மில்லியன் அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் சொல்வதென்றால் சுமார் ரூ.1,747 கோடி மதிப்புக்கொண்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு 146 மில்லியன் அமெரிக்க டாலர் என்று இருந்த நிலையில் ஒரே வருடத்தில் அதன்மதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது.

இப்பட்டியலில் இரண்டாமிடம் பிடித்திருப்பது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வெல்லாத அணியான ஆர்சிபியின் மதிப்பு இந்த ஆண்டு 195 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,607 கோடி. இதுவே கடந்த ஆண்டு இதன் மதிப்பு 128 மில்லியன் அமெரிக்க டாலர்.

மூன்றாமிடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி. கடந்த ஆண்டு 141 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற நிலையில் இருந்து இந்த ஆண்டு 190 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட அணியாக உயர்ந்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.1,565 கோடி.

நான்காமிடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி - கடந்த ஆண்டு 122 மில்லியன் டாலர், இந்த ஆண்டு 181 மில்லியன் டாலர், இந்திய மதிப்பில் ரூ.1,492 கோடி.

ஐந்தாம் இடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி - கடந்த ஆண்டு 83 மில்லியன் டாலர், இந்த ஆண்டு 133 மில்லியன் டாலர், இந்திய மதிப்பில் ரூ.1,096 கோடி.

ஆறாம் இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி - கடந்த ஆண்டு 81 மில்லியன் டாலர், இந்த ஆண்டு 128 மில்லியன் டாலர், இந்திய மதிப்பில் ரூ.1,056 கோடி.

ஏழாம் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி - கடந்த ஆண்டு 59 மில்லியன் டாலர், இந்த ஆண்டு 120 மில்லியன் டாலர், இந்திய மதிப்பில் ரூ.1024 கோடி.

எட்டாம் இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி - இந்த அணிக்கு இதுவே முதல் ஆண்டு. தற்போதைய மதிப்பு ரூ.989 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்பதாம் இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி - கடந்த ஆண்டு 63 மில்லியன் டாலர், இந்த ஆண்டு 90 மில்லியன் டாலர், அதாவது, இந்திய மதிப்பில் ரூ.741 கோடி.

பத்தாவது இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி - இதுவே முதல் ஆண்டு, தற்போதைய பிராண்ட் மதிப்பு 83 மில்லியன் டாலர், இந்திய மதிப்பில் 684 கோடி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x