Published : 11 Jul 2023 01:03 PM
Last Updated : 11 Jul 2023 01:03 PM
அஜிங்கிய ரஹானேவுக்கு கடந்த மாதம் 35 வயது நிரம்பியது. ஆனால், அவரோ இன்னும் தன்னிடம் இளமை ஊஞ்சலாடுகிறது என்றும், நிறைய கிரிக்கெட் பாக்கி இருக்கிறது என்றும் தெரிவித்து தன் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ரோஹித் சர்மாவை விட கேப்டன்சி திறமைப் படைத்த ரஹானே இப்போது ரோஹித்தின் துணை கேப்டன் என்பதுதான் நகைமுரண். நாளை டொமினிசியாவில் முதல் டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கும், மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையே தொடங்குகின்றது. ரோஹித், கோலி போன்ற தரமான பவுலிங்கை நன்றாக ஆடும் திறனை ஐபிஎல்-ல் பறிகொடுத்த வீரர்களுக்கு இந்தத் தொடர் ஒரு வரப்பிரசாதம். அதுவே ரஹானே விஷயத்தில் இது அப்படியல்ல. ஐபிஎல் பார்மை வைத்து அவர் டெஸ்ட் அணிக்குள் வந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முறையே முதல் இன்னிங்ஸில் 89 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்களை அவர் எடுத்திருந்தார்.
இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பேட்டியளித்த ரஹானே கூறும்போது, “நான் இன்னும் இளமையாக இருக்கிறேன், என்னில் நிறைய கிரிக்கெட் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில், எனது உடற்தகுதிக்காக நான் நிறைய உழைத்தேன். எனது பேட்டிங்கில் நான் பணியாற்ற வேண்டிய சில குறைபாடுகள் இருந்தன. நான் எனது கிரிக்கெட்டை மிகவும் ரசிக்கிறேன், எனது பேட்டிங்கை ரசிக்கிறேன். நான் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. ஒவ்வொரு ஆட்டமும் தனிப்பட்ட முறையில் அணியின் பார்வையில் முக்கியமானது. நான் அதில் தான் கவனம் செலுத்துகிறேன்.
அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகும் இப்போது சேர்க்கப்பட்ட பிறகும் எதுவும் மாறிவிடவில்லை. சிஎஸ்கே எனக்கு ஒரு ரோலைக் கொடுத்தது, நீங்கள் அந்த ரோலை நிறைவேற்ற முயற்சிக்கிறீர்கள். அதற்கு முன், எனது ரோல் ஒரு நங்கூரமாக நின்று ஆடுவதாக இருந்தது, அதன்படி நான் ஆடினேன். சிஎஸ்கே நிர்வாகம் என்னிடம், 'உனக்கு சுதந்திரம் இருக்கிறது, அதன்படி விளையாடு' என்று கூறியது. நான் உண்மையில் ஒரு ஸ்ட்ரோக்-மேக்கர், நான் எப்போதும் ரன்கள் எடுக்கப் பார்ப்பவன். ரோல் மாறிவிட்டது, வேறு எதுவும் மாறவில்லை. அணி எனக்கு அளிக்கும் பங்கை நிறைவேற்றுவேன் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். அதில்தான் நான் கவனம் செலுத்துகிறேன்.
ரோஹித் எனக்கு அளிக்கும் ரோலை நான் நிறைவேற்றுவேன். ரோஹித்தின் கீழ் விளையாடுவது சிறப்பானது. அவர் வீரர்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறார், பின்னர் அவர்களை ஆதரிக்கிறார். இவையெல்லாம் ஒரு சிறந்த கேப்டனின் அடையாளங்கள். சிறந்த உறவுகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். நான் துணை கேப்டனாகப் பழகிவிட்டேன். ஏறக்குறைய ஐந்து வருடங்களாக கடுமையாக உழைத்தேன். ஆனால் மீண்டும் அணிக்கு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். துணை கேப்டனாக திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சி" என தெரிவித்துள்ளார்.
ஜெய்ஸ்வால் குறித்து… “அவர் அணியில் வந்ததற்காக நான் மகிழ்கிறேன். அவர் ஒரு உற்சாகமூட்டும் திறமை. டொமஸ்டிக் கிரிக்கெட்டில் மும்பைக்காகவும், ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பாகத் தன்னை வெளிப்படுத்தினார். அனைத்தையும் விட சிறந்தது அவர் ரெட் பால் கிரிக்கெட்டில் விளையாடுவது. அவரிடம் நல்ல ரெக்கார்ட் உள்ளது. துலீப் டிராபியில் கடந்த ஆண்டு சிறப்பாக ஆடினார். அவருக்கான என் செய்தி என்னவெனில் ‘போ.. களத்தில் உன்னை நன்றாக வெளிப்படுத்திக் கொள்’ என்பதே.. சர்வதேச கிரிக்கெட், ‘அது இது’ என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். களத்தில் இறங்கி சுதந்திரமாக ஆடுவதுதான் முக்கியம்.
நாங்கள் வெஸ்ட் இண்டீஸை குறைத்து மதிப்பிடவில்லை. வெளியில் மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. ஆனால், நாங்கள் அவர்களை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதே உண்மை. உள்நாட்டில் அவர்களது ஆட்டம் சிறப்பாகவே இருந்து வருவதை அறிகிறோம். இப்போது நன்றாகத் தொடங்கும் அளவுக்கு பயிற்சியில் சிறப்பாகத் திகழ்ந்தோம்” என ரஹானே கூறினார்.
When #TeamIndia Captain @ImRo45 turned reporter in Vice-Captain @ajinkyarahane88's press conference
What do you make of the questions #WIvIND pic.twitter.com/VCEbrLfxrq— BCCI (@BCCI) July 11, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT