டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைவான பந்துகளில் 1,000 ரன்களை எட்டி ஹாரி புரூக் சாதனை!

ஹாரி புரூக்
ஹாரி புரூக்
Updated on
1 min read

லீட்ஸ்: டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைவான பந்துகளை எதிர்கொண்டு 1,000 ரன்களை எட்டி புதிய சாதனை படைத்துள்ளார் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்.

நடப்பு ஆஷஸ் தொடரில் ஹெட்டிங்லி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக 0-2 என பின்னடைவில் இருந்தது இங்கிலாந்து அணி. அதனால் தொடரின் 3-வது போட்டியான ஹெட்டிங்லி போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் இங்கிலாந்து அணி இருந்தது. அப்போது தான் இந்தத் தொடரில் தங்களது வெற்றி வாய்ப்பை உயிர்ப்புடன் வைக்க முடியும் என்ற நிலை.

இந்த முக்கியமான போட்டியில் அணிக்கு தேவைப்பட்ட நேரத்தில் நேர்த்தியாக ஆடி அசத்தியுள்ளார் ஹாரி புரூக். 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தப் போட்டியில் இங்கிலாந்து விரட்டியது. இருந்தாலும் 171 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது கிறிஸ் வோக்ஸ் உடன் இணைந்து முக்கியமான கூட்டணி அமைத்தார் புரூக். அதன் மூலம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் 93 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து புரூக் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் அவர் 47 ரன்களை எட்டிய போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 1,000 ரன்களை எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக குறைவான பந்துகளில் (1058 பந்துகள்) 1,000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் 17 இன்னிங்ஸ் ஆடி 1,000 ரன்களை அவர் கடந்தார்.

இதுவரை இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். 17 இன்னிங்ஸில் மொத்தம் 1,028 ரன்கள் எடுத்துள்ளார். 5 அரைசதம் மற்றும் 4 சதங்கள் இதில் அடங்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைவான பந்துகளில் 1,000 ரன்கள் எட்டிய வீரர்கள்

  • 1058 பந்துகள்: ஹாரி புரூக் (இங்கிலாந்து)
  • 1140 பந்துகள்: கொலின் டி கிராண்ட்ஹோம் (நியூஸிலாந்து)
  • 1167 பந்துகள்: டிம் சவுதி (நியூஸிலாந்து)
  • 1168 பந்துகள்: பென் டக்கெட் (இங்கிலாந்து)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in