Published : 08 Jul 2023 02:11 PM
Last Updated : 08 Jul 2023 02:11 PM
மும்பை: எதிர்வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி தொடங்க உள்ள உலகக் கோப்பை தொடரை வென்று கொடுக்கும் திறன் படைத்த வீரர்கள் இந்திய அணியில் இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள அவர், "ஐசிசி நடத்தும் தொடரை இந்திய அணி வென்று 10 ஆண்டு காலம் ஆகிறது. இந்திய அணியின் கோடான கோடி ரசிகர்களின் பெருங்கனவு என்றால் இப்போதைக்கு ஐசிசி தொடரின் கோப்பை தான். அதுவும் கடந்த மூன்று ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பட்டம் வென்ற அணிகள் தொடரை நடத்திய அணிகள் தான். அந்த வகையில் இந்த தொடரை இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
“சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடுவதால் கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மற்ற அணிகளைக் காட்டிலும் ஆடுகள சூழலை இந்திய அணி அதிகம் அறிந்திருக்கும். சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிய பங்கு வகிப்பார்கள். தொடரை வென்று கொடுக்கும் வீரர்கள் நம் அணியில் உள்ளனர்.
இதில் சவால் என்னவென்றால் சீனியர் பேட்ஸ்மேன்கள் நல்ல உடற்தகுதியுடனும், சிறந்த ஃபார்மில் இருப்பதும் அவசியம். பேட்டிங் சிறப்பானதாக அமைந்துவிட்டால் இந்தியாவை வீழ்த்துவது மற்ற அணிகளுக்கு கடினம். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் முன்னின்று விளையாடி, வென்று கொடுக்க வேண்டிய தொடர் இது.
பந்துவீச்சை பொறுத்தவரையில் பும்ரா, சிராஜ், ஷமி, ஜடேஜா, சஹல், குல்தீப் ஆகியோர் உள்ளனர். இதில் பும்ரா வரும் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவார் என சொல்லப்பட்டுள்ளது. அவரது வருகை அணிக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்திய அணிக்கு சவாலான போட்டி என்றால் அது அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி தான்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT