Published : 08 Jul 2023 11:25 AM
Last Updated : 08 Jul 2023 11:25 AM

இந்திய கிரிக்கெட் அணியின் மன்னாதி மன்னன்: சவுரவ் கங்குலி பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

கங்குலி | கோப்புப்படம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு இன்று பிறந்தநாள். இதே நாளில் கடந்த 1972-ல் கொல்கத்தாவில் பிறந்தார். இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் என அறியப்படுகிறார்.

செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கங்குலி. சிறு வயதில் அவர் விரும்பி விளையாடியது கால்பந்து தான். அதில் அவருக்கு ஏதோ ஒரு வகையான ஈர்ப்பு இருந்துள்ளது. பத்தாம் வகுப்பு படித்த போதுதான் அவர் தொழில்முறை கிரிக்கெட் சார்ந்த பயிற்சியில் சேர்ந்துள்ளார். அது கூட அவரது மூத்த சகோதரரின் ஆதரவு இருந்த காரணத்தினால் தான். வலது கை பழக்கமுடைய அவர் இடது கையில் பேட் செய்து பழகினார். கிரிக்கெட்டில் அவர் திறனை மேம்படுத்த வீட்டில் மினி பயிற்சிக் கூடம் அப்போது அமைக்கப்பட்டது. முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டேவிட் கோவர் தான் கங்குலியின் பேவரைட்.

படிப்படியாக உள்ளூர் அளவிலான கிரிக்கெட்டில் விளையாடி தனது திறனை நிரூபித்தார் கங்குலி. 1989-ல் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகம். 1990-91 ரஞ்சிக் கோப்பை சீசனில் சிறப்பாக ஆடி இந்திய அணியில் இடம் பிடித்தார். 1992-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நான்கு ஆண்டு காலம் அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. மீண்டும் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஒரு ரவுண்டு வந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார். அதே ஆண்டில் அணியின் தொடக்க ஆட்டக்காரராக மாறினார். சச்சின் டெண்டுல்கர், கேப்டன் பொறுப்பு வேண்டாம் என விலக 2000-மாவது ஆண்டில் அணியின் கேப்டன் ஆனார் கங்குலி. தனது கிரிக்கெட் கேரியரின் கடைசி கட்டத்தில் ஐபிஎல் களத்தில் விளையாடினார். அவரது தலைமையில் இந்திய அணி மறுமலர்ச்சி அடைந்தது. தனக்குப் பிறகான இந்திய அணியின் எதிர்காலத்தை அபாரமாக கட்டமைத்தார். அது அப்படியே இன்று வரை தொடர்ந்து வருகிறது.

கங்குலியின் சாதனைகள்...

  • சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.
  • இந்திய அணிக்காக 311 ஒருநாள் மற்றும் 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 18,575 ரன்கள் எடுத்துள்ளார்.
  • ஒருநாள் கிரிக்கெட்டில் 11,363 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் உலக அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 9-ம் இடத்தில் அவர் உள்ளார்.
  • இந்தியாவின் சச்சின், பாகிஸ்தானின் இன்சமாமை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டிய மூன்றாவது வீரராக அறியப்படுகிறார்.
  • ஒருநாள் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை விரைந்து எடுத்த வீரர்களில் இரண்டாம் இடத்தில் கங்குலி உள்ளார். கடந்த 2017 வரை கங்குலி தான் முதலிடத்தில் இருந்தார். டிவிலியர்ஸ் அதை தகர்த்தார்.
  • ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள், 100 விக்கெட்டுகள், 100 கேட்ச்கள் பிடித்த 6 வீரர்களில் கங்குலியும் ஒருவர்.
  • ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்தவர்.
  • 2003 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியை வழி நடத்தியவர். இந்திய அணி இந்த தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது.
  • சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் சதம், உலகக் கோப்பை அரையிறுதியில் சதம் பதிவு செய்தவர்.
  • ஆஃப் சைட் திசையில் அநாயசமாக ரன் குவிப்பதில் வல்லவர்.
  • அவரது தலைமையிலான அணியில் யுவராஜ் சிங், ஜாஹிர் கான், தோனி போன்ற அபார திறன் படைத்த வீரர்கள் இந்திய அணியில் அறிமுகமாகி இருந்தனர்.
  • சச்சின் உடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக 7,000+ ரன்களை குவித்த கங்குலி, சேவாக்கிற்காக தனது பேட்டிங் ஆர்டரை மாற்றிக் கொண்டார். அதே நேரத்தில் அணியில் விளையாடிய இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவதிலும் கங்குலி அங்கம் வகித்தார்.
  • பிசிசிஐ-யின் தலைவராக இரண்டு ஆண்டு காலம் இயங்கியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x