Published : 07 Jul 2023 12:12 PM
Last Updated : 07 Jul 2023 12:12 PM
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இன்று பிறந்தநாள். அவரது ரசிகர்கள் அனைவரும் அதிர்வேட்டு போட்டு பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
தோனி, சிறந்த ஃபினிஷர், அதிரடி பேட்ஸ்மேன், அபார விக்கெட் கீப்பர், கூலான கேப்டன் என்று தான் அறியப்படுகிறார். ஆனால், அவர் டாப் ஆர்டரில் அதிரடியாக பேட் செய்யும் திறன் படைத்தவர். அதில் டிவிஷனல் அளவிலான கிரிக்கெட்டில் இருந்தே தோனி கலக்கியவர். அது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நன்கு அறிந்திருந்தார். கங்குலி தலைமையில் தான் தோனி முதன்முதலில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார்.
இந்திய அணிக்கு அதிரடி பாணியில் பேட் செய்யக்கூடிய விக்கெட் கீப்பர் தேவை இருந்தது. அதற்கான தேடல் படலம் நடந்தபோது கண்டெடுக்கப்பட்ட மாணிக்கம் தான் தோனி. அவர் குறித்த விவரம் தேர்வுக் குழு, கேப்டன் கங்குலி என சென்றுள்ளது. அதுவும் இந்திய ஏ அணிக்காக முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் தோனி ஆடிய ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தொடர்ந்து 2004-ல் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. முதல் நான்கு இன்னிங்ஸில் ரன் சேர்க்க தடுமாறினார் தோனி. ஆனால், தோனியின் ஐந்தாவது இன்னிங்ஸில் (2005) அவரை டாப் ஆர்டரில் ஆட வைத்தார் கங்குலி. இம்முறை அதற்கு பலன் கிடைத்தது. 123 பந்துகளில் 148 ரன்கள் எடுத்தார் தோனி. அணியின் மொத்த ரன்களில் தோனியின் பங்கு 41.57 சதவீதம்.
தோனி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 16 முறை மூன்றாவது பேட்ஸ்மேனாக பேட் செய்துள்ளார். அதன் மூலம் 993 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதம், 6 அரை சதங்களும் அடங்கும். சராசரி 82.75. ஸ்ட்ரைக் ரேட் 99.70. ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ரன்களான 183 (நாட் அவுட்) ரன்களை மூன்றாவது பேட்ஸ்மேனாக பேட் செய்து தான் தோனி எடுத்தார்.
“தோனி முதல் சில போட்டிகளில் 7-வது பேட்ஸ்மேனாக தான் விளையாடி இருந்தார். விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாகக் கூட அணியின் ஆலோசனை கூட்டத்தில் தோனி 7-வது பேட்ஸ்மேனாக தான் விளையாட இருப்பதாக பேசி இருந்தோம். நான் எனது அறையில் அவர் குறித்து யோசித்தேன். அவரது திறனை எப்படி வெளிக்கொண்டு வருவது என யோசித்தேன். அடுத்த நாள் டாஸ் வென்றதும் பேட்டிங் தேர்வு செய்தேன். அப்போது அவரை 3-வது பேட்ஸ்மேனாக களம் அனுப்பலாம் என முடிவு செய்தேன்.
நான் நேராக டிரெஸ்ஸிங் ரூம் சென்றேன். தோனி ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு இருந்தார். ‘நீ மூன்றாம் இடத்தில் ஆடு’ என்றேன். அவரோ ‘அப்போது நீங்கள் என்றார்?’, ‘நான் 4-வது பேட்ஸ்மேனாக ஆடுகிறேன்’ என சொன்னேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பது அனைவரும் அறிவோம்” என முன்னர் ஒரு பேட்டியில் கங்குலி தெரிவித்திருந்தார். இந்த போட்டிக்கு முன்னதாக தனிப்பட்ட முறையில் தோனியுடன் கங்குலி பேசி இருந்ததாகவும் தகவல். கேப்டன் கங்குலி தன் மீது வைத்த நம்பிக்கையை அன்று தோனி காத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT