Published : 07 Jul 2023 07:04 AM
Last Updated : 07 Jul 2023 07:04 AM
சென்னை: கிரிக்கெட் விளையாட்டின் அசகாய சூரன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் இன்று. அவருக்கு வயது 42. ராஞ்சியில் இருந்து தன் கனவை தேடி புறப்பட்டு வந்த தோனி, பின்னாளில் கோடான கோடி கிரிக்கெட் ரசிகர்களின் கனவுகளை மெய்ப்பிக்க செய்தார்.
கிரிக்கெட் உலகில் அவர் பறக்கவிடும் சிக்ஸர்கள் வேறு ரகம். அதுவும் அந்த ஹெலிகாப்டர் ஷாட் குறித்து சொல்லவே வேண்டாம். அவர் அடித்து பறக்கவிடும் பந்தோடு சேர்ந்து ரசிகர்களின் நெஞ்சங்களும் ‘சிக்ஸ் போகணும்’ என பறக்கும். அந்த அளவிற்கு தனது ஆட்டத்திறனால் ரசிகர்களை கட்டிப்போடும் காந்த சக்தியை தன்னகத்தே கொண்டவர்.
சர்வதேச கிரிக்கெட்டில் 360 சிக்ஸர்: தோனி இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து 360 சிக்ஸர்களை பதிவு செய்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 239 சிக்ஸர்கள். இது தவிர பிஹார், ஜார்க்கண்ட், கிழக்கு மண்டலம், ரயில்வே, கிளப் போட்டிகள், ஜூனியர் கிரிக்கெட், மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கிரிக்கெட் என எத்தனை சிக்ஸர்கள் அடித்திருப்பார் என்பதற்கு கணக்கு இல்லை. எப்படி அதை சேர்த்தால் சுமார் 1000 சிக்ஸர்களை தோனி விளாசி இருப்பார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தோனி அடித்த முதல் சிக்ஸர்: கடந்த 2004 டிசம்பர் 23-ல் சர்வதேச கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி அறிமுகமானார். முதல் போட்டியில் ரன் அவுட். அந்த தொடரின் அடுத்த போட்டியில் 11 பந்துகளுக்கு 12 ரன்கள். மூன்றாவது போட்டியில் இந்தியா ரன் வேட்டை ஆடியது. கடைசி 2 பந்தில் மட்டுமே தோனிக்கு ஸ்ட்ரைக் கிடைத்தது. அந்த ஓவரை காலித் முகமது வீசினார்.
முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டார் தோனி. அடுத்த பந்தில் சிங்கிள். அது தான் சர்வதேச கிரிக்கெட்டில் தோனி அடித்த முதல் சிக்ஸர். அடுத்த ஆண்டே இலங்கை அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 10 சிக்ஸர்களை விளாசி இருந்தார். 2011 உலகக் கோப்பை உட்பட பல்வேறு தருணங்களில் இந்திய அணிக்கு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துள்ளார். இது அனைத்திற்கும் தொடக்கப் புள்ளி அது தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT