Published : 06 Jul 2023 12:45 AM
Last Updated : 06 Jul 2023 12:45 AM
மும்பை: வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணியில் இடம்பிடித்துள்ளார் பழங்குடி பெண் மின்னு மணி. சீனியர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் கேரள கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் இடம் பெறுவது இதுவே முதல்முறை.
தடகளம், கால்பந்து மற்றும் கைப்பந்து போன்ற விளையாட்டுகளில் மிகப்பெரிய நட்சத்திரங்களை உருவாக்கிய கேரள மாநிலம், இந்திய விளையாட்டுகளின் சக்தி மையங்களில் ஒன்றாக இருந்தாலும், கிரிக்கெட் என்று வரும்போது விரல்விட்டு என்னும் அளவுக்கே அம்மாநிலத்தில் இருந்து தேசிய அணியில் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். டினு யோஹன்னன், எஸ். ஸ்ரீசாந்த், சஞ்சு சாம்சன் மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய நான்கு பேர் மட்டுமே இதுவரை இந்தியாவுக்காக விளையாடியுள்ளனர்.
ஆண்கள் கிரிக்கெட்டுக்கே இந்த நிலை என்றால், மகளிர் கிரிக்கெட்டுக்கு கேரளத்தில் இருந்து இதுவரை யாரும் தேர்வு செய்யப்படாத நிலை இருந்தது. தற்போது அதனை மாற்றி வரலாறு படைத்துள்ளார், 24 வயதான பழங்குடி பெண்ணான மின்னு மணி. இந்தியாவுக்காக விளையாடும் முதல் மலையாளி இவர் அல்ல. மலையாளியான சூசன் இட்டிச்சேரியா இதற்கு முன் இந்திய அணிக்கு தேர்வானாலும் அவர் தமிழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த மின்னு மணி?: எழில்கொஞ்சும் வயநாட்டில் உள்ள பட்டியல் பழங்குடியினரில் ஒன்றான குறிச்சியா பழங்குடியினத்தைச் சேர்ந்த மின்னு, வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வயநாட்டில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே வயல்வெளியில் அக்கம்பக்க சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் போது ஒரு பீல்டராக பந்துகளை எடுக்கச் சென்ற மின்னு, ஒருகட்டத்தில் தானும் கிரிக்கெட்டை நேசிக்க துவங்கினார். சிறுவர்களுடன் விளையாடும் போது, மின்னு ஒரு பீல்டராக மட்டுமே இருப்பார், பேட் செய்யவோ அல்லது பந்து வீசவோ அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அவர் கிரிக்கெட் விளையாடுவது பிடிக்காது. காரணம் கிரிக்கெட், பெண்களின் விளையாட்டு அல்ல என்று கருதப்பட்டதே. ஆனால் மின்னு விளையாடுவதை நிறுத்தவில்லை. அந்த அளவுக்கு கிரிக்கெட் மீது அவருக்கு விருப்பம். அந்த விருப்பத்துக்காக அங்கீகாரம், அவர் படித்த பள்ளியில் கிடைத்தது.
பள்ளியில் விளையாடத் தொடங்கியபோது, சிறப்புக் கல்வி ஆசிரியர் எல்சம்மா விளையாட்டில் மின்னுவின் திறமையைக் கவனித்து, வயநாடு கிரிக்கெட் சங்கப் பயிற்சியாளர் ஷானவாஸிடம் அவரை அறிமுகப்படுத்தினார். பின்னர் ஷாநவாஸ் வயநாடு மாவட்ட சங்கம் மாவட்ட அளவில் இருந்து, மாநில அளவிலும், பின்னர் தென்னிந்திய அளவிலும் மின்னுவின் திறமை வயநாட்டில் கேரள கிரிக்கெட் சங்கம் அமைத்த மகளிர் அகாடமி மூலம் வெளிப்பட, ஒன்பதாம் வகுப்பு முதல் இளங்கலைப் பட்டம் வரை, அந்த கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிபெற்றார். பயிற்சி செய்யக்கூடிய மைதானத்திற்குச் செல்ல மின்னுவின் வீட்டில் இருந்து ஒன்றரை மணிநேரம் பயணிக்க வேண்டியிருந்தது.
அந்த சோதனைகளை கடந்து சாதித்தவருக்கு, சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த, முதல் மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக களமிறங்கும் வாய்ப்பு உண்டானது. விளையாடிய மூன்று ஆட்டங்களில் அவரால் முத்திரை பதிக்க முடியவில்லை என்றாலும் உள்நாட்டு போட்டிகளில் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்தால் மின்னுவை தேர்வாளர்களால் புறக்கணிக்க முடியவில்லை. தற்போது இந்திய சீனியர் அணியில் இந்திய வீராங்கனைகளில் ஒருவராக இடம்பிடித்துள்ளார் மின்னு.
டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் வலது கை ஆஃப் ஸ்பின்னர் மட்டுமல்ல, மின்னு சிறந்த பீல்டரும் கூட. இந்திய அணிக்கான ஆல்-ரவுண்டராக மின்னுவின் தேர்வு கேரளாவின் இளம் பெண் கிரிக்கெட் வீராங்கனைக்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT