Published : 05 Jul 2023 08:10 AM
Last Updated : 05 Jul 2023 08:10 AM
புதுடெல்லி: பேன்டஸி ஸ்போர்ட்ஸ் செயலிகளுக்கு இந்தியாவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இச்செயலிகளின் வருவாய் குறித்த விவரங்களை ரெட்சீர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டு ஐபிஎல் போட்டி சமயத்தில் பேன்டஸி ஸ்போர்ட்ஸ் செயலிகளின் வருவாய் ரூ.2,800 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 24 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ஐபிஎல் சமயத்தில் அச்செயலிகளின் வருவாய் ரூ.2,250 கோடியாக இருந்தது.
ஐபிஎல் சமயங்களில், ட்ரீம் 11 போன்ற பேன்டஸி ஸ்போர்ட்ஸ் செயலிகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. வீரர்கள் எத்தனை ரன்கள், விக்கெட் எடுப்பார்கள் உட்பட பல்வேறு கணிப்புகளை பார்வையாளர்கள் இந்தச் செயலிகளில் பந்தயமாக முன்வைப்பார்கள்.
கிரிக்கெட் தவிர கால்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், கபடி உள்ளிட்ட விளையாட்டுகள் சார்ந்தும் இச்செயலிகள் செயல்படுகின்றன. எனினும், இச்செயலிகளின் வருமானத்தில் 50 சதவீதம் ஐபிஎல் மூலமே வருகிறது என்று ரெட்சீர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
18 கோடி பயனாளர்கள்: நடப்பாண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது 6.1 கோடி பேர் பேன்டஸி ஸ்போர்ட்ஸ் செயலிகளைப் பயன்படுத்தியுள்ளனர். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் புதிதாக35 சதவீதம் பேர் செயலிகளை பயன்படுத்தி இருப்பதாக ரெட்சீர் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட பேன்டஸி ஸ்போர்ட்ஸ் செயலிகள் உள்ளன. மொத்தம் 18 கோடி பயனாளர்கள் இச்செயலிகளில் கணக்கு வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT