Published : 03 Jul 2023 04:09 PM
Last Updated : 03 Jul 2023 04:09 PM

ஆஷஸ் சர்ச்சை | பேர்ஸ்டோ அவுட்: அலெக்ஸ் கேரிக்கு அஸ்வின் ஆதரவுக் குரல்!

அஸ்வின் | கோப்புப்படம்

திருநெல்வேலி: லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ அவுட் செய்யப்பட்ட விதம் சர்ச்சையானது. இந்தs சூழலில் அவரை அவுட் செய்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரிக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்.

இந்தப் போட்டியில் பேர்ஸ்டோ 22 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். க்ரீன் வீசிய ஷாட் பிட்ச் பந்தை பேர்ஸ்டோ அப்படியே தன்னை கடந்து போக செய்தார். அது விக்கெட் கீப்பர் கேரியின் கைகளில் தஞ்சம் அடைவதற்குள் எதிர் திசையில் இருந்த கேப்டன் ஸ்டோக்ஸை நோக்கி நடக்க துவங்கினார். அவர் கிரீஸ் லைனை கடந்ததை கவனித்த கேரி, ஸ்டம்புகளை தகர்த்தார். முடிவில் அவர் ஸ்டம்பிங் முறையில் அவுட் செய்யப்பட்டார். ஆனால் அவர் ரன் அவுட் செய்யப்பட்டதாக இங்கிலாந்து நாட்டு ஊடகங்கள் அதனை சர்ச்சையாக மாற்றின.

“பேர்ஸ்டோ கிரீஸை விட்டு நகர்வதை சில பந்துகளுக்கு முன்பாகவே கேரி கவனித்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். அதனால், பந்தை பற்றியதும் தாமதிக்காமல் ஸ்டம்பிங் செய்தார். அது விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட்ட ஒன்று. சிலர் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். ஆனால், விதி இப்படி தான் உள்ளது” என போட்டிக்கு பின்னர் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்திருந்தார்.

அஸ்வின் கருத்து: இந்தச் சூழலில் ட்விட்டர் பயனர் ஒருவர், “கேரியின் இந்தச் செயலை போற்றுபவர்கள்தான் அஸ்வின், நான்-ஸ்ட்ரைக்கர் என்டில் கிரீஸை கடக்கும் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்தால் விமர்சிக்கிறார்கள்” எனத் தெரிவித்தார். அதில் அஸ்வினையும் அந்தப் பயனர் டேக் செய்திருந்தார்.

“இதன் மூலம் நாம் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பேர்ஸ்டோ செய்ததை போல சில பேட்ஸ்மேன்கள் பந்தை விட்டதும் கிரீஸை விட்டு தொடர்ந்து நகர்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஒரு பேட்டரின் இத்தகைய செயல்பாட்டை விக்கெட் கீப்பர் அல்லது ஃபீல்டிங் செய்யும் அணியினர் கவனித்தால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவ்வளவு தூரத்தில் இருந்து கீப்பரால் ஸ்டம்பிங் செய்ய முடியும். அப்படி இல்லையென்றால் அது நடக்க வாய்ப்பில்லை. இதனை நாம் சர்ச்சையாக எழுப்புவதை காட்டிலும் தனியொரு வீரரின் விளையாட்டு திறனை பாராட்ட வேண்டும்” என அஸ்வின் ட்வீட் செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x