Published : 03 Jul 2023 11:13 AM
Last Updated : 03 Jul 2023 11:13 AM
லார்ட்ஸ்: லார்ட்ஸ் டெஸ்ட் வழக்கமான ஆஷஸ் தொடர் விறுவிறுப்புடன் நேற்று 5ம் நாளில் ஆஸ்திரேலியாவின் வெற்றியுடன் முடிந்தது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் அன்று ஹெடிங்லேயில் செய்ததை தனி மனிதராக இங்கும் செய்வார் என்றே ஆஸ்திரேலியாவை பதட்டமடையச் செய்தது அவரது திடீர் அதிரடி வேகம். பேர்ஸ்டோ ஆட்டமிழந்த பிறகே பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவின் ஷார்ட் பிட்ச் எகிறு பந்து உத்திகளை சிக்சர்களைப் பறக்க விட்டு சிதறடித்தார், முறியடித்தார்.
பென் டக்கெட் இரண்டாவது இன்னிங்சிலும் செஞ்சுரி வாய்ப்பைப் பறிகொடுத்தார். அவர் முதல் இன்னிங்ஸில் 98 ரன்கள் என்றாலும், 2வது இன்னிங்சில் 45/4 என்ற நிலையிலிருந்து பென் ஸ்டோக்சுடன் இணைந்து மிக முக்கியமான 132 ரன்கள் கூட்டணி அமைத்தார், 2வது இன்னிங்சிலும் பென் டக்கெட் அதிரடியாக ஆடி 112 பந்துகளில் 83 ரன்களை விளாசி ஹேசில்வுட்டின் எகிறு பந்தில் கேரியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இங்கிலாந்து அப்போது 177/5. இந்நிலையில்தான் இங்கிலாந்தின் விதியையும் ஆஸ்திரேலியாவின் விதியையும் தீர்மானிக்கும் பென் ஸ்டோக்ஸ்-ஜானி பேர்ஸ்டோ கூட்டணி இணைந்தது.
ஜானி பேர்ஸ்டோ 22 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தது பெங்களூரில் ஒருமுறை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக ரன் அவுட் ஆனாரே அதே போன்றது. பந்து டெட் ஆகாத போதே கிரீசுக்கு வெளியே மூக்கை உறிஞ்சியபடி உலாவி ஜான் எம்பியூரேவால் ரன் அவுட் செய்யப்பட்டார் ஸ்ரீகாந்த், இதனால் பலரின் கேலிக்கு ஆளானார். அதே போல் நேற்று பேர்ஸ்டோ பந்து அவரைக் கடந்து சென்றதும் பந்து டெட் ஆயிற்றா இல்லையா என்பதை கண்டுகொள்ளாமலேயே கிரீசுக்கு வெளியே வந்து பிட்சை சோதிக்குமாறு வந்ததாகத் தெரிகிறது. ரன் எடுக்க முயற்சி செய்யவில்லை, ஆனால் பந்து டெட் ஆகவும் இல்லை, விக்கெட் கீப்பர் கேரி கையில்தான் இருந்தது. டெட் ஆகவில்லை என்பதை அவர் உணரவில்லை, வெளியே வந்தவுடன் கேரி பந்தை ஸ்டம்பில் அடிக்க பேர்ஸ்டோவுக்கு தனிக்குழப்பம். என்ன நடந்தது என்பதை அவர் உணரவில்லை. கடைசியில் தேர்டு அம்பயர் அவுட் என்று தீர்ப்பளிக்கவும் பெரிய திரையில் பார்த்தும் கூட அவரால் நம்ப முடியவில்லை. இந்த ஸ்டம்ப்டு அவுட் இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பையே புரட்டிப் போட்டு விட்டது.
பேர்ஸ்டோவின் இந்த அவுட்டை ரசிகர்கள் வழக்கம் போல் புரிந்து கொள்ளவில்லை ஆஸ்திரேலியர்களை ‘ஏமாற்றுக்காரர்கள், அதே ஆஸி.கள்தான்’ என்று கத்தினர் கதறினர். ஆனால் விதிமுறை யாருக்காகவும் பணியப்போவதில்லை என்ற எளிய உண்மையை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அஸ்வின் இதைச் செய்தால் கொண்டாடும் இந்திய ரசிகர்கள் உட்பட பேர்ஸ்டோ அவுட் முறையை ஏதோ ஏமாற்று வேலை போலவே பார்த்தனர். ஆனால் அது அவுட்.
விதிமுறை 20.1.2 கூறுவதென்னவெனில், பந்து பவுலர் முனை நடுவரை சென்றடையும் வரை அது உயிர்ப்புடன் இருக்கிறது, டெட் இல்லை என்கிறது. ஆகவே அது அவுட் தான். இதில் ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் என்ற சூட்சமத்திற்கெல்லாம் இடமில்லை. ஆனால் பேர்ஸ்டோ வெளியே செல்வதற்காக கேரி காத்திருந்து இதைச் செய்தாரா என்பதற்கும் ஆதாரம் இல்லை. அனைத்துமே உடனடியாக நிகழ்ந்தது. இதில் ரசிகர்கள் கோபப்படுவது அபத்த களஞ்சியமே. 100% அவுட் என்று இயான் மோர்கனே கூறிவிட்டார். கேரி ஸ்மார்ட்டாகச் செயல்பட்டதாகவே இங்கிலாந்து வர்ணனையாளர்களே கூறுகின்றனர், மேலும் பேர்ஸ்டோவின் செயல் புத்தியற்றது என்றும் கூறி விமர்சிக்கின்றனர்.
இவர் நின்றிருந்தால் பென் ஸ்டோக்ஸ் அடித்த அடிக்கு இங்கிலாந்து எளிதில் வென்றிருக்கும். பென் ஸ்டோக்ஸ் 4வது இன்னிங்சில் புதிய உலக சாதனை படைத்தார், 6-ம் நிலையில் இறங்கும் எந்த வீரரும் 150 ரன்களை 4வது இன்னிங்ஸில் எடுத்ததில்லை. கடைசியாக ஆடம் கில்கிறிஸ்ட் பாகிஸ்தானுக்கு எதிராக 149 நாட் அவுட் தான் ஹை ஸ்கோராகும்.
பேர்ஸ்டோ அவுட் ஆன விதம் பற்றி கடும் கோபமடைந்த பென் ஸ்டோக்ஸ் 126 பந்துகளில் 62 ரன்களில் இருந்தவர் சிக்சர்களைப் பறக்க விட்டார். அடுத்த 16 பந்துகளில் 38 ரன்களை விளாசி 142 பந்துகளில் சதம் கண்டார். ஆட்டத்தின் போக்கு சட்டென மாறிவிட்டது. கிரீன் பந்தில்தான் பேர்ஸ்டோ அவுட் ஆனார், அதற்காக கேமரூன் கிரீனை அடுத்தடுத்து ஹாட்ரிக் சிக்சர்களை விளாசி ஒரே ஓவரில் 23 ரன்கள் என்று அவரைப் பிரித்து மேய்ந்தார். ஸ்டூவர்ட் பிராட் பேர்ஸ்டோ ஸ்டம்ப்டு மீது கடும் கோபம் கொண்டு ஆஸ்திரேலியர்களை தொடர்ந்து வசைபாடியும், வாக்குவாதத்தில் ஈடுபட்டும் இருந்து கொண்டிருந்தார். இதனால் என்ன ஆனது சில பல பந்துகளை ஹெல்மெட், ஹெல்மெட் கம்பி, நெஞ்சு, விலா எலும்பு, கை மணிக்கட்டு என்று பவுன்சர்களில் அடி வாங்க நேரிட்டது. ஆனாலும் நின்றார் 11 ரன்களை மட்டுமே அவர் அடித்தாலும் பென் ஸ்டோக்சுடன் சேர்ந்து 108 ரன்களை 20 ஓவர்களில் எடுக்க உதவினார்.
நடுவில் பென் ஸ்டோக்ஸ் 114 ரன்களில் இருந்த போது ஸ்டீவ் ஸ்மித் கையில் வந்த கேட்சை விட்டார். அது மேட்சை விட்டதாகி விடுமோ என்று நினைக்கும் அளவுக்கு ஸ்டோக்ஸ் 155 ரன்கள் வரை வந்தார். இலக்கும் 100 ரன்களுக்கும் கீழ் சடுதியில் இறங்கியது. இது ஒரு கபில்தேவ் ரக இன்னிங்ஸ். அனைத்தும் சடுதியில் மாறிவிடும் ஒரு பேட்டிங். ஸ்மித் விட்ட கேட்ச் 2019 ஹெடிங்லேயில் ஸ்டோக்ஸ் அடித்து வெற்றி பெறச் செய்ததை ஆஸ்திரேலியர்களுக்கு நினைவூட்டியிருக்கக் கூடும். ஆனால் ஜாஷ் ஹேசில்வுட் பந்து ஒன்றை லெக் திசையில் அடிக்கப் போனார் ஸ்டோக்ஸ் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஆஃப் சைடில் எழும்பியது, அலெக்ஸ் கேரி கேட்ச் பிடித்தார், இங்கிலாந்தின் வெற்றிக் கதவும் அடைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா 2-0 என்று முன்னிலை பெற்றது. இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபிளாட்டாக பிட்ச் போட்டால் டீப்பில் நிறுத்தி வைத்து பவுன்சர்கள் வீசி ரன் ஸ்கோரிங்கை கட்டுப்படுத்தி வெறுப்பேற்றி எடுக்கும் நடைமுறை இந்த டெஸ்ட்டிலிருந்து ஒரு தொடக்கமாக இருக்கும் என்று நம்பலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT