Published : 01 Jul 2023 06:23 AM
Last Updated : 01 Jul 2023 06:23 AM
புசான்: ஆடவருக்கான ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடர் கொரியாவில் உள்ள புசான் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா, கொரியா, ஜப்பான், ஈரான், சீன தைபே, ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்துகொண்டுள்ளன. இந்திய அணி லீக் சுற்றில் கொரியா, ஜப்பான், ஈரான்,சீன தைபே, ஹாங் காங் ஆகிய 5 அணிகளையும் வீழ்த்தி இருந்தது.
இந்நிலையில் நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி, ஈரானை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 42-32 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் பவன் ஷேராவத் 10 புள்ளிகள் குவித்தார்.
ஆட்டம் தொடங்கிய 10-வதுநிமிடத்திலேயே பவன் ஷெராவத், அஸ்லாம் இனாம்தார் ஆகியோரது வெற்றிகரமான ரைடுகள் மற்றும் சிறந்த டிபன்ஸ் காரணமாக ஈரானைஆல் அவுட் ஆக்கியது இந்தியஅணி. தொடர்ந்து சிறந்த செயல்திறனால் இந்திய அணி முன்னிலையை அதிகரித்துக்கொண்டே சென்றது. இதன் காரணமாக 19-வது நிமிடத்தில் ஈரான் அணியை மீண்டும் ஆல் அவுட் செய்தனர் இந்திய அணி வீரர்கள்.
முதல் பாதியில் இந்திய அணி 23-11 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 2-வது பாதியில் ஈரான் அணி பதிலடி கொடுத்தது. இதனால் 29-வது நிமிடத்தில் இந்திய அணி ஆல் அவுட் ஆனது.
போட்டி முடிவடைய 2 நிமிடங்களே இருந்த நிலையில் ஈரான் அணி 31-38 என நெருங்கி வந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்திய அணி மேற்கொண்டு 4 புள்ளிகளை சேர்த்து போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT