Published : 01 Jul 2023 06:29 AM
Last Updated : 01 Jul 2023 06:29 AM
பெங்களூரு: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா - லெபனான் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் மோதுகின்றன.
சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், நேபாளம் அணிகளை வீழ்த்திய நிலையில் குவைத் அணிக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்து ‘ஏ’ பிரிவில் 2-வது இடம் பிடித்திருந்தது. அதேவேளையில் லெபனான் லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்தது. வங்கதேசம், மாலத்தீவுகள், பூட்டான் அணிகளை வீழ்த்தி ‘பி‘ பிரிவில் முதலிடம் பிடித்திருந்தது லெபனான்.
இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற இன்டர்கான்டிடென்டல் கோப்பை தொடரில் லெபனானுக்கு எதிராக இந்திய அணி இரு முறை மோதி இருந்தது. இதில் லீக் சுற்றில் அந்த அணிக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிரா செய்திருந்த இந்திய அணி, இறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றிருந்தது. ஒட்டுமொத்தமாக இரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் லெபனான் 3 ஆட்டங்களிலும், இந்தியா 2 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்திருந்தன.
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்திய அணி, இம்முறையும் சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகிறது. அணியின் துருப்பு சீட்டாக கேப்டன் சுனில் சேத்ரி உள்ளார். இந்தத் தொடரில் அவர், 5 கோல்கள் அடித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடித்த ஹாட்ரிக் கோல்களும் இதில் அடங்கும்.
அவருடன் சாஹல் சமத், மகேஷ் சிங், உதாந்தா சிங்ஆகியோரும் பலம் சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர். இந்திய அணியின் டிபன்ஸும் சமீபகாலமாக பலம் பெற்று வருகிறது. கடைசியாக விளையாடிய 9 ஆட்டங்களில் இந்திய அணி ஒரு கோல் மட்டுமே வாங்கி உள்ளது. இருப்பினும் லெபனான் அணி, விரைவாக எதிர்தாக்குதல் தொடுக்கும் திறன் கொண்டது என்பதால் இந்திய அணியின் டிபன்ஸ் கடும் சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT