நினைவு இருக்கிறதா? | 309, 319, 219, 119, 254 ரன்கள் எடுத்த பேட்களின் படங்களை பகிர்ந்த சேவாக்!
புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட்டில் தனது அபார இன்னிங்ஸில் தான் அதிரடியாக ரன் குவித்த பேட்களின் படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக். அதிரடி பாணி கிரிக்கெட்டுக்கு சேவாக் பெயர் பெற்றவர்.
கிரிக்கெட் பந்தை ஈவு இரக்கமின்றி அடித்து, ரன் குவிக்கும் வீரர்களில் ஆல்-டைம் ஃபேவரைட் என்றால் அது சேவாக் தான். அப்படித்தான் வரலாறும் இருக்கிறது. இந்த டொக்கு வைத்து ஆடுவது எல்லாம் அவருக்குப் பிடிக்காது. அவர் அடித்தால் அது டக்கர் என்ற ரகத்தில் இருக்கும். தற்போது டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடுவதை 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மெட்டில் செய்து கொண்டிருந்தவர்தான் சேவாக்.
இந்திய அணிக்காக 374 சர்வதேச போட்டிகளில் சேவாக் விளையாடி உள்ளார். 17,253 ரன்கள் குவித்துள்ளார். இதில் 38 சதங்கள் மற்றும் 72 அரை சதங்கள் அடங்கும். இந்திய அணி வீரர்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர் சேவாக்.
இந்த சூழலில் தனது சர்வதேச கிரிக்கெட் கேரியரில் சிறப்பான இன்னிங்ஸ் என தான் கருதும் இன்னிங்ஸில் ரன் குவிக்க உதவிய பேட்களின் புகைப்படத்தை சேவாக் பகிர்ந்துள்ளார். 309, 319 , 219, 119 , 254 என தான் குவித்த ரன்களை அதில் சேவாக் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இதில் 293 ரன்கள் குவித்த பேட் தவறவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களின் மனக்கண்ணில் சேவாக்கின் அந்த அதிரடி இன்னிங்ஸை நினைவலைகளாக ரீவைண்ட் செய்கிறது.
- 309 ரன்கள்: பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த 2004-ல் முல்தானில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சேவாக் இந்த 309 ரன்களை பதிவு செய்திருந்தார்.
- 319 ரன்கள்: கடந்த 2008-இல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 319 ரன்களை சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் குவித்திருந்தார்.
- 219 ரன்கள்: கடந்த 2011-ல் இந்தூரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 219 ரன்கள் எடுத்திருந்தார்.
- 119 ரன்கள்: கடந்த 2008-ல் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்த சதத்தை சேவாக் பதிவு செய்திருந்தார்.
- 254 ரன்கள்: கடந்த 2006-ல் பாகிஸ்தானுக்கு எதிராக லாகூரில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்த ரன்களை சேவாக் எடுத்திருந்தார்.
- 293 ரன்கள்: 2009-ல் மும்பையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 293 ரன்கள் எடுத்திருந்தார். இந்த இன்னிங்ஸில் அவர் பயன்படுத்திய பேட் தவறவிட்டுள்ளார். இந்த போட்டிகள் எதிலும் இந்தியா தோல்வி பெறவில்லை. இரண்டு டெஸ்ட் போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.
