Published : 28 Jun 2023 11:41 AM
Last Updated : 28 Jun 2023 11:41 AM
சிகப்புப் பந்தில் 5 நாட்கள் ஆடப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் வெள்ளைப்பந்து கிரிக்கெட் ஆட்டங்களின் செயல்பாடுகளை வைத்து இந்திய டெஸ்ட் அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதா என்று டெஸ்ட் அணித் தேர்வு குறித்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
சுனில் கவாஸ்கர் இந்த ஐயங்களை கண்டனமாக எழுப்பியுள்ளார். சர்பராஸ் கானைத் தேர்வு செய்யாமல் பல மழுப்பல் காரணங்களைக் கூறிய காரணங்கள் போய் இப்போதெல்லாம் தேர்வாளர்கள் செய்தியாளர்களையே சந்திப்பதில்லை, அப்படி சந்தித்தால் ஏன் புஜாரா நீக்கம்?, ஏன் சர்பராஸ் கான் தேர்வு செய்யப்படவில்லை போன்ற கேள்விகள் கேட்கப்படும் என்பதனால் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்க்கின்றனரா என்று கவாஸ்கர் கண்டனங்களுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளும், அதன் ஸ்பான்சர்களும், அணி உரிமையாளர்களின் லாப வேட்டையுமே இந்திய டெஸ்ட் அணித்தேர்வை தீர்மானிக்கின்றன என்ற சந்தேக நெருப்புக்கு நெய் ஊற்றுவது போல் ஐசிசி டெஸ்ட் இறுதிப் போட்டி அணியில் இஷான் கிஷனைத் தேர்வு செய்தது. டெஸ்ட் அணியில் சூரியகுமார் யாதவைத் தேர்வு செய்தது, தற்போது மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடர் அணியில் ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆகியவை அமைந்துள்ளன.
ஆனால், உண்மையில் ஹர்திக் பாண்டியா உள்ளே வந்திருப்பார். அவர் ஐபிஎல் போட்டிகளில் சுகம் கண்டுவிட்டார், அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தான் தயாராகவில்லை என்று கூறி ஒதுங்கிக் கொண்டார். பாண்டியா, தவான் ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ஆடுகின்றனர். இருவரும் சையத் முஷ்டாக் அலி டி20 டிராபியில் ஒரு போட்டியிலும், விஜய் ஹசாரே 50 ஓவர் ஒருநாள் தொடரில் ஒரு போட்டியிலும் மட்டுமே ஆடுகின்றனர். மற்றபடி உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடுவதில்லை, ஐபிஎல் நீங்கலாக.
ரஹானேவைத் தேர்வு செய்தது அவர் உள்நாட்டு போட்டிகளில் அடித்த ரன்களாலேயே என்று பிசிசிஐ தரப்பு உதட்டுச் சேவை செய்தாலும், சிஎஸ்கே-யின் வெற்றிகரமான வீரராக 2023 சீசனில் அவர் ஆடியதே அவரை மறு தேர்வுக்கு இட்டுச் சென்றது என்பதே பெரும்பான்மையோர் தீர்ப்பாக இருக்கின்றது. இப்போது சர்பராஸ் கான் என்ற வீரர் முன்பு அமோல் மஜூம்தார், சமீபமாக கருண் நாயர் விரயம் செய்யப்பட்டது போல் விரயம் செய்யப்படப்போகிறார் என்ற ஐயங்கள் வலுவாக எழுந்துள்ளன. மணீஷ் பாண்டேவின் கதியும் இதுதான், அவரது ஐபிஎல் ஆட்டங்களுடன் உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் உச்சத்தில் இருந்தபோது கூட டெஸ்ட் அணிக்கு அவரை பரிசீலிக்கவில்லை.
முன்பெல்லாம் உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து இந்தியா ஏ அணிக்கு தேர்வு செய்து. அதனடிப்படையில் இந்திய டெஸ்ட் அணிக்குள் நுழைவதுதான் நிகழ் முறையாக இருந்தது. இப்போது எல்லாம் தலைகீழ் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர். எந்த அடிப்படையில் ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கானை விட தேர்வுக்குத் தகுதியானவர்? என்ற கேள்விகள் எழுப்பாமல் இல்லை. இந்திய அணி, வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சோடை போவதற்கு பிரதான காரணம் ஒன்று இங்கு குழிப்பிட்ச்களைப் போட்டு அஸ்வினையும், ஜடேஜாவையும், அக்சர் படேலையும் வைத்து ஜெயிப்பதும். ஐபிஎல் திறமைகளை வைத்து டெஸ்ட் அணியில் ஆட்களை தேர்வு செய்வதுமே என்ற இரண்டு விமர்சனங்களை பிசிசிஐ எப்படி எதிர் கொள்ளப்போகிறது என்பதைப் பொறுத்துதான் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.
ஐபிஎல் பெர்பார்மன்ஸ் டெஸ்ட் அணித் தேர்வை தீர்மானித்தால் உள்நாட்டு கிரிக்கெட் ஏன் நடத்த வேண்டும். முற்றிலும் அதை ஒழித்து விட வேண்டியதுதானே என்று கவாஸ்கர் கேட்பது குறித்த பிசிசிஐ பதிலென்ன என்பதைப் பொறுத்து சர்பராஸ் கான் போன்ற இளம் திறமைகளின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்றே விவரம் தெரிந்த கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT