Published : 28 Jun 2023 09:51 AM
Last Updated : 28 Jun 2023 09:51 AM

ODI WC 2023 | டாப் ஆர்டரில் 2 இடது கை பேட்டர்கள் அவசியம்: ரவி சாஸ்திரி திட்டவட்டம்

ரவி சாஸ்திரி | கோப்புப்படம்

இந்திய அணியில் டாப் 6 பேட்டர்களில் ஒரே இடது கை வீரராக ரிஷப் பந்த் மட்டுமே இருந்தார். ஆனால் அவரும் காயம் காரணமாக இல்லாததால் இந்திய அணியில் இடது கை பேட்டர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ரிஷப் பந்த் அளவுக்கு இஷான் கிஷனின் பேட்டிங்கில் நம்பகத்தன்மை இல்லை. அவர் வங்கதேசத்திற்கு எதிராக அதிவேக அதிரடி இரட்டைச் சதம் விளாசியது அவர் மீது நம்பிக்கை ஏற்படுத்தினாலும் சீரான முறையில் அவர் ஆடுவதில்லை. இப்போது ரிங்கு சிங் பெயர் அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அணிக்கு இடது கை பேட்டர்கள் தேவை என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. 2011 உலகக்கோப்பையில் கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா என்று அணியில் லெஃப்ட் ஹேண்டர்கள் இருந்தனர். ஆகவே இடது கை வீரர்கள் அணியில் இருப்பது எதிரணியினருக்கு பெரிய சவால் என்பதில் மாற்று கருத்துகள் இல்லை. அதனால்தான் ரவி சாஸ்திரி மிகச்சரியாகவே இரண்டு இடது கை பேட்டர்கள் தேவை என்கிறார்.

இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியது:

“அணியில் சரியான வீரர்களின் சேர்க்கை அவசியம். அணிக்கு இடது கை பேட்டர்கள் தேவை. தொடக்க நிலையில் இல்லாவிட்டாலும் 3 அல்லது 4ம் நிலையில் இடது கை பேட்டர்கள் இந்த உலகக்கோப்பைக்குத் தேவை. இத்தகைய விருப்பத் தெரிவுகளை எப்போதும் பரிசீலனையில் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக டாப் 6 பேட்டர்களில் 2 இடது கை வீரர்கள் இந்திய அணிக்கு அவசியம் என்று கருதுகிறேன்.

நாம் எப்போது நன்றாக ஆடும் போதும் இடது கை பேட்டர்களின் பங்களிப்பு பெரிய அளவில் தாக்கம் செலுத்தியுள்ளது. 2011 உலகக்கோப்பையில் கம்பீர், ரெய்னா, யுவராஜ் சிங் இருந்தனர். 1974 வெஸ்ட் இண்டீஸ் அணியில் பார்த்தால் ராய் பிரெடெரிக்ஸ், ஆல்வின் காளிச்சரண், கிளைவ் லாய்ட் இருந்தனர். 1979-லும் இதே அணிச்சேர்க்கை அங்கு இருந்தது. 1983 அணியில்தான் இடது கை வீரர்கள் இல்லை. 1987-ல் ஆஸ்திரேலியாவில் ஆலன் பார்டர் டாப் ஆர்டர் நிலையில் இடது கை பேட்டராக திகழ்ந்தார். பின் வரிசையில் 2-3 இடது கை பேட்டர்கள் இருந்தனர். 1996 உலகக்கோப்பையில் ஜெயசூரியா, ரணதுங்கா, அசங்கா குருசிங்கா ஆகியோர் இலங்கை அணி கோப்பையை வெல்வதில் கடும் பங்களிப்பு செய்தனர்.

1999-2003-ல் ஆஸ்திரேலியாவிடம் கில்கிறிஸ்ட், ஹெய்டன் போன்றோர் இருந்தனர். ஹாட்ரிக் உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலியா தட்டிச் செல்லும் போது இடது கை பேட்டர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. இந்திய அணியில் இப்போது போதுமான இடது கை பேட்டர்கள் இருக்கின்றனர். இஷான் கிஷன், திலக் வர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் எந்த ஒரு சீனியர் வீரரையும் ரீப்ளேஸ் செய்ய முடியும்.

இவ்வாறு கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x