Published : 28 Jun 2023 08:36 AM
Last Updated : 28 Jun 2023 08:36 AM

உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை + சுவாரஸ்ய தகவல்கள்

ரோஹித் மற்றும் கோலி

மும்பை: இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டது. இதன்படி அக்டோபர் 5 முதல் நவம்பர் 19-ம் தேதி வரை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத்தொடரில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்துகொள்ள தகுதி பெற்றிருந்தன.

மீதம் உள்ள இரு அணிகள் தகுதி சுற்றின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளது. ஹைதராபாத், அகமதாபாத், தரம்சாலா, டெல்லி, சென்னை, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய 10 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. 46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ரவுண்ட் ராபின் முறையில் லீக் சுற்று நடைபெறுகிறது.

இதன்படி ஒவ்வொரு அணியும் தலா 9 ஆட்டங்களில் விளையாடும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். முதல் அரையிறுதிப் போட்டி நவம்பர் 15-ம் தேதி மும்பையிலும், 2-வது அரையிறுதிப் போட்டி நவம்பர் 16-ல் கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளன. நவம்பர் 19-ம் தேதி அகமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, நியூஸிலாந்துடன் அக்டோபர் 5-ம் தேதி மோதுகிறது. இந்த ஆட்டம் 1.30 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கும் வசதி கொண்ட அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 8-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

குவாஹாட்டி, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய மைதானங்களில் பயிற்சி ஆட்டங்கள் செப்டம்பர் 29 முதல் அக்டோர் 3-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

8,400 கி.மீ. பயணிக்கும் இந்திய அணி: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தனது 9 லீக் ஆட்டங்களை 9 நகரங்களில் விளையாடுகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் 34 நாட்களில் 8,400 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க உள்ளனர். ஒருவேளை இந்திய அணி அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் 9,700 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொள்ளும்.

விமான பயணத்தில் 34 நாட்களில் 8,400 கிலோ மீட்டர் என்பது என்பது பெரிதாகத் தெரியவில்லை என்றாலும், இந்திய வீரர்கள் இரவு 11 மணிக்குள் தங்கள் ஆட்டத்தை முடித்துவிட்டு அதன் பின்னர் அடுத்த போட்டிக்காக விமானத்தைப் பிடிக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டால் 100 ஓவர்கள் களத்தில் விளையாடி விட்டு பயணம் மேற்கொள்வது சோர்வை அளிக்கக்கூடும்.

ஒரு போட்டிக்கும் அடுத்த போட்டிக்கும் 3 நாட்கள் இடைவெளி என்ற நிலையில் வலை பயிற்சிக்குக்கூட போதுமான நேரம் இருக்குமா? என்பதும் சந்தேகமாகி உள்ளது. தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளைவிட இந்தியா மட்டுமே அதிக தொலைவு பயணிக்கிறது.

‘போட்டி கடுமையாக இருக்கும்’ - ரோஹித் சர்மா: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “இந்த உலகக் கோப்பை மிகவும் போட்டித் தன்மை வாய்ந்ததாக இருக்கும், ஏனெனில் ஆட்டம் விரைவுத் தன்மை கொண்டதாகி உள்ளது மற்றும் அணிகள் முன்பை விட நேர்மறையாக விளையாடுகின்றன. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு இவை அனைத்தும் நல்ல விஷயமாக இருக்கும். அவர்களுக்கு பல சிலிர்ப்பான தருணங்களை வழங்குவதை இந்தத் தொடர் உறுதி செய்யும். நாங்கள் சிறப்பாக தயாராக காத்திருக்கிறோம். அக்டோபர்-நவம்பரில் சிறப்பாக செயல்படுவோம்” என்றார்.

5 இடங்களில் பாக். போட்டி: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் லீக் ஆட்டங்கள் ஹைதராபாத், அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா ஆகிய 5 நகரங்களில் நடைபெறுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிடிவாதம்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியான நிலையில், இந்தத் தொடரில் நாங்கள் பங்கேற்பது மற்றும் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத்தில் அல்லது நாங்கள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றால் மும்பையில் விளையாடுவது என அனைத்தும் அரசாங்கத்தின் அனுமதியைப் பொறுத்ததுதான் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் ஐசிசி தொடர்பாளர் கூறும்போது, “அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் நாட்டின் விதிகள் மற்றும் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும், நாங்கள் அதை மதிக்கிறோம். ஆனால் ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருகை தரும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

தவறிய ஹைதராபாத்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் 10 மைதானங்களில் இந்திய அணி 9 மைதானங்களில் லீக் ஆட்டங்களை விளையாடுகிறது. இதில் ஹைதராபாத்தில் மட்டுமே இந்திய அணி விளையாடும் ஆட்டம் இடம்பெறவில்லை.

பகலில் 6 ஆட்டங்கள்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் 6 ஆட்டங்கள் பகலில் நடத்தப்பட உள்ளது. மீதம் உள்ள அனைத்து ஆட்டங்களும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளன. பகலில் நடைபெறும் ஆட்டம் காலை 10.30 மணிக்கும், பகலிரவு ஆட்டங்கள் பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கும்.

அரை இறுதி ட்விஸ்ட்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டங்கள் கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெற உள்ளன. பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றால் அந்த அணி கொல்கத்தாவில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறினால் அந்த ஆட்டம் மும்பையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தியா–பாகிஸ்தான் அணிகள் அரை இறுதி சுற்றில் நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டால் அந்த ஆட்டம் கொல்கத்தாவில் நடத்தப்படும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

சென்னையில் 5 ஆட்டங்கள்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 5 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 8-ம் தேதி இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடர்ந்து 14-ம் தேதி நியூஸிலாந்து–வங்கதேசம், 18-ம் தேதி நியூஸிலாந்து–ஆப்கானிஸ்தான், 23-ம் தேதி பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான், 27-ம் தேதி பாகிஸ்தான்–தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

ரிசர்வ் நாள்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஆட்டம் நடைபெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ரிசர்வ் நாளில் போட்டி நடத்தப்படும்.

‘கோலிக்காக வெல்ல வேண்டும்’ - சேவக்: உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவக் கூறும்போது, “நாங்கள் சச்சின் டெண்டுல்கருக்காக 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றோம். விராட் கோலி தற்போது சச்சின் டெண்டுல்கரின் வரிசையில் இருக்கிறார். விராட் கோலி விளையாடும் விதம், பேசும் விதம், மற்ற வீரர்களை கவனித்துக்கொள்ளும் விதம், கிரிக்கெட்டை தனது ஆர்வத்துடன் விளையாடும் விதம் அபாரமானது. இதனால் விராட் கோலிக்காக இந்த உலகக் கோப்பையை வெல்ல அனைவரும் விரும்ப வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x