Published : 27 Jun 2023 08:01 AM
Last Updated : 27 Jun 2023 08:01 AM
சென்னை: தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் நேற்று தமிழ்நாடு - ரயில்வே அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 3-1 என்ற கோல்கணக்கில் வென்றது. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் பிரியதர்ஷினி அடித்த கோல் காரணமாக முதல் பாதியில் தமிழ்நாடு அணி 1-0 என முன்னிலை வகித்தது. 2-வது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் 47-வது நிமிடத்தில் ரயில்வே அணியின் சுப்ரியா ரவுத்ரே ‘சுய கோல்’ அடித்தார். இதனால் தமிழ்நாடு 2-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நட்சத்திர வீராங்கனையான இந்துமதி கார்த்திசன் 53-வது நிமிடத்தில் கோல் அடிக்க நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் தமிழ்நாடு அணி 3-0 என முன்னிலை வகித்தது. இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தில் ரயில்வே அணியின் திபர்னிதா டே கோல் அடித்தார். இது கோல்கள் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது. முடிவில் தமிழ்நாடு அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு அணி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடைசியாக 2017-18-ம்சீசனில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. தற்போதைய அணியில் உள்ள 12 வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
5 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தமிழ்நாடு அணியானது பட்டம் வெல்வதற்கான ஆட்டத்தில் நாளை (28-ம் தேதி), ஹரியாணா அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT