Published : 24 Jun 2023 06:29 AM
Last Updated : 24 Jun 2023 06:29 AM

மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: இந்தியா முதல் ஆட்டத்தில் கனடாவுடன் மோதல்

புதுடெல்லி: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சிலி நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் நடைபெற உள்ளது.

இந்தத் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் 16 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் பெல்ஜியம், கனடா, ஜெர்மனி அணிகளும் உள்ளன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நவம்பர் 29-ம் தேதி கனடாவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து டிசம்பர் 1-ம் தேதி ஜெர்மனியுடனும், 2-ம் தேதி பெல்ஜியத்துடனும் இந்திய அணி மோதுகிறது.

தரவரிசையில் முதலிடம் வகிக்கும் நெதர்லாந்து ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் சிலி, தென் ஆப்பிரிக்கா அணிகளும் இடம் பிடித்துள்ளன.

‘பி’ பிரிவில் அர்ஜெண்டினா, கொரியா, ஸ்பெயின், ஜிம்பாப்வே அணிகளும், ‘டி’ பிரிவில் இங்கிலாந்து, ஜப்பான், நியூஸிலாந்து, அமெரிக்கா அணிகளும் உள்ளன.

சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஜூனியர் ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இதனால் கூடுதல் நம்பிக்கையுடன் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி களமிறங்க உள்ளது.

கடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி, இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x