Published : 24 Jun 2023 06:20 AM
Last Updated : 24 Jun 2023 06:20 AM
புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் தொடருக்கான அணியில் சீனியர் பேட்ஸ்மேன் சேதேஷ்வர் புஜாரா, வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ்
குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. 16 பேர் கொண்ட டெஸ்ட் அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்கிறார். துணை கேப்டனாக அஜிங்க்ய ரஹானே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சீனியர் பேட்ஸ்மேனான சேதேஷ்வர் புஜாரா, வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மொகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புஜாரா கடந்த 3 ஆண்டுகளாக சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் பேட்ஸ்மேன்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேருமே உள் நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி இருந்தனர். வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி நீண்ட காலத்துக்கு பிறகு அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான அணியில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில்பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஜூலை 12-ம் தேதி முதல் 16-ம் தேதிவரை டொமினிகாவிலும், 2-வது ஆட்டம் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை டிரினிடாட்டிலும் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி 27-ம் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி 29-ம் தேதியும் பார்படாஸில் நடைபெறுகிறது. கடைசி ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 1-ம் தேதி டிரினிடாட்டில் நடத்தப்பட உள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரானது 2023-25ம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா பங்கேற்கும் முதல் தொடராக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டி அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெயதேவ் உனத்கட், மொகமது சிராஜ், உம்ரன் மாலிக், முகேஷ் குமார்.
டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்ய ரஹானே, கே.எஸ்.பரத், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், அக்சர் படேல், மொகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT