Published : 21 Jun 2023 10:10 AM
Last Updated : 21 Jun 2023 10:10 AM
ஆஷஸ் டெஸ்ட் தொடர் வழக்கமான ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களுக்கான பில்ட்-அப் போல் பிசுபிசுத்துப் போகாமல், பில்ட்-அப்பிற்கு ஏற்ப உச்ச நிலையை எட்டி ‘த்ரில்’ வெற்றியாக ஆஸ்திரேலியா பக்கம் சென்றது. ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
கடைசியில் ஆட்ட நாயகன் கவாஜா ஆட்டமிழந்த போது 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்கள் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தோற்கும், இங்கிலாந்து பாஸ்பால் வெற்றி என்றே நினைக்கத் தோன்றியது. ஆனால், பவுலிங்கில் எப்படி கம்மின்ஸ், நேதன் லயன் கூட்டணி சாதித்ததோ அதே போல் பேட்டிங்கிலும் 55 ரன்கள் வெற்றிக் கூட்டணி அமைத்து ஆஸ்திரேலியாவை கரைசேர்த்தனர். இங்கிலாந்து என்னதான் மேக்கரித்து சூப்பர் டெஸ்ட் என்றெல்லாம் கூறினாலும் ஆஷஸ் தோல்வியை அவர்களால் ஜீரணிக்க முடியாது என்பதுதான் உண்மை.
முதல் டெஸ்ட் வெற்றியில் சில சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அது என்ன?
281 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக ஆஸ்திரேலியா விரட்டியது, இது போன்ற இலக்குகளை விரட்டுவது 4-வது முறையாகும். 1948-ம் ஆண்டு இங்கிலாந்தின் ஹெடிங்லீயில் 404 ரன்களை வெற்றிகரமாக விரட்டியதற்குப் பிறகு, அதாவது 75 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா இங்கிலாந்து மண்ணில் விரட்டி உள்ள அதிகபட்ச 4-வது இன்னிங்ஸ் ஸ்கோர் இதுவே. இன்னொரு சுவாரஸ்யமான விவரம் என்னவென்றால் 1949 முதல் 2022 வரை இங்கிலாந்தில் 31 ஆஷஸ் டெஸ்ட்களில் 4-வது இன்னிங்ஸ் இலக்கு 250 ரன்கள் என்றால் கூட ஆஸ்திரேலியா விரட்டியதில்லை. இதில் 18 தோல்விகள்.
ஆஸ்திரேலியா விரட்டிய அதிகபட்ச 4-வது இன்னிங்ஸ் இலக்குகள்
கடைசியாக ஆஸ்திரேலியா 250க்கும் அதிகமான 4-வது இன்னிங்ஸ் வெற்றி இலக்கை விரட்டியது 2011-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகத்தான். அதில் இன்னொரு தற்செயல் சுவாரஸ்யம் என்னவெனில் அப்போது தன் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடிய இன்றைய கேப்டன் பாட் கம்மின்ஸ் வின்னிங் ஷாட்டை நேற்று அடித்தது போலவே பவுண்டரியாக விளாசினார்.
2011-22 இடையில் 250 ரன்களுக்கும் அதிகமான வெற்றி இலக்கை விரட்டும் போது 19 முறை தோல்வி கண்டுள்ளது ஆஸ்திரேலியா.
இந்தத் தோல்விக்கு முன்னர் 26 இன்னிங்ஸ்களில் எதிரணியை இங்கிலாந்து ஆல் அவுட் செய்து வெற்றி கண்டுள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிரணியினரை 4-வது இன்னிங்சில் ஆல் அவுட் செய்வதில் இதுதான் இணைந்த நீண்ட கால வெற்றி தக்கவைப்பாகும். 1999-2001 காலகட்டத்தில் 33 முறை எதிரணியினரை ஆஸ்திரேலியா ஆல் அவுட் செய்துள்ளனர். தென் ஆப்பிரிக்கா 2017-18 காலகட்டத்தில் 25 முறை எதிரணியினரை ஆல் அவுட் செய்துள்ளனர்.
8-வது முறையாக 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுகிறது.
முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்து தோல்வி காண்பது இப்போது இங்கிலாந்து செய்துள்ள தேவையில்லாத சாதனை, இதற்கு முன்னர் 1981-ம் ஆண்டில் லீட்ஸ் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 401 ரன்கள் என்று முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்து 18 ரன்களில் டெஸ்ட் போட்டியை இழந்தது.
நேதன் லயன், பாட் கம்மின்ஸ் நேற்று சேர்த்த 55 ரன்கள் வெற்றிக் கூட்டணி 9-வது அல்லது 10-வது விக்கெட்டுக்காக வெற்றிகரமாக கூட்டணி சேர்ந்து எடுத்த 7-வது அதிகபட்ச கூட்டணி ரன்களாகும்.
உஸ்மான் கவாஜா 796 நிமிடங்கள் பேட் செய்தார். இதுதான் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் அதிக நேரம் கிரீசில் இருந்ததற்கான 2-வது டெஸ்ட் சாதனையாகும். பெஷாவரில் 1998-ம் ஆண்டு மார்க் டெய்லர் 334 ரன்கள் எடுத்த போது 938 நிமிடங்கள் கிரீசில் இருந்து சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.
இதுவரை டெஸ்ட் போட்டியின் 5 நாளும் பேட் செய்தவர்கள் 13 வீரர்கள், இதில் கவாஜாவும் இணைந்து விட்டார். இவர் கிம் ஹியூஸுக்குப் பிறகு 5 நாட்களும் பேட் செய்த 2-வது ஆஸ்திரேலிய வீரர் ஆனார். கிம் ஹியூஸ் 1980-ல் லார்ட்ஸில் இந்தச் சாதனையைச் செய்தார்.
கவாஜா எதிர்கொண்ட பந்துகள் 518. இதுவும் ஒரு சாதனை இதற்கு முன்னர் ரிக்கி பாண்டிங் 2012-ல் இந்தியாவுக்கு எதிராக அடிலெய்டில் 500க்கும் அதிகமான பந்துகளை எதிர்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT