Published : 20 Jun 2023 12:32 PM
Last Updated : 20 Jun 2023 12:32 PM
இங்கிலாந்தின் ஓல்ட் டிராபர்டில் இன்று அதிகாலை நடைபெற்ற யூரோ கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து அணி, நார்த் மெசிடோனியா அணியை 7-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி, குரூப் சி-யில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு ஹாரி கேன், ஆட்டத்தின் 29 மற்றும் 73-வது நிமிடங்களில் கோல்களை அடிக்க, புகாயோ சாகா 38, 47, 51-வது நிமிடங்களில் கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். மார்கஸ் ராஷ்போர்ட் 45-வது நிமிடத்திலும், கால்வின் பிலிப்ஸ் 64-வது நிமிடத்திலும் கோல்களை அடித்தனர். இந்தத் தோல்வி நார்த் மேசிடோனியாவின் கால்பந்து வரலாற்றில் மோசமான படுதோல்வி என்று வர்ணனையாளர்கள் வர்ணித்துள்ளனர்.
ஜெர்மனியில் அடுத்த கோடையில் நடைபெறும் யூரோ கோப்பைக் கால்பந்துக்கு இங்கிலாந்து தகுதி பெறும் நிலையை எட்டியுள்ளது. இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் நார்த் மேசிடோனியாவின் தடுப்பு உத்தி அட்டகாசமாக அமைய இங்கிலாந்து ஊடுருவ தடுமாறியது. ஆனால் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் 29-வது நிமிடத்தில் லூக் ஷாவின் கிராஸை அற்புதமாக கோலாக மாற்ற கோல் கதவுகள் விரியத் திறந்தன.
உடனே 38-வது நிமிடத்தில் ஹாட்ரிக் நாயகன் சாகா, கைல் வாக்கரின் பாஸ் ஒன்றை கோலாக மாற்ற 45-வது நிமிடத்தில் மார்கஸ் ராஷ்போர்ட், ஜோர்டான் ஹெண்டர்சனின் அபாரமான ஆட்டத்தினால் 3-வது கோலை அடித்தார். இந்நிலையிலிருந்து ஆட்டம் முற்றிலும் ஒருதலைப்பட்சமாக மாறியது. 47-வது நிமிடத்தில் சாகா, ட்ரெண்ட் அலெக்சாண்டர் அடித்த லாங் பாஸை அற்புதமாக கட்டுப்படுத்தி இடது காலால் இடி போன்ற உதை ஒன்றை உதைக்க பந்து நார்த் மேசிடோனியா கோல் கீப்பர் டிமிட்ரிவ்ஸ்கியைத் தாண்டி கோலாக மாறியது.
இதற்கு அடுத்ததாக சாகா, கேப்டன் ஹாரி கேனின் அருமையான பாஸை எடுத்துச் சென்று கோலாக மாற்ற ஹாட்ரிக் சாதனை புரிந்தார். பிறகு இங்கிலாந்து பயிற்சியாளர் சவுத்கேட் சில பல மாற்றங்களைச் செய்தார். அப்போது களமிறக்கப்பட்ட மாற்று வீரர் கால்வின் பிலிப்ஸ் இங்கிலாந்தின் 6-வது கோலை திணித்தார். 73-வது நிமிடத்தில் ஹாரி கேன் நார்த் மேசிடோனியா வீரரின் ஃபவுலைப் பயன்படுத்தி 7-வது கோலை அடித்தார்.
கடந்த நவம்பர் 2021-ல் சான் மரினோவை 10-0 என்று வென்ற பிறகு மிகப்பெரிய வெற்றியை இங்கிலாந்து சாதித்தது. கோல்களை நோக்கிய ஷாட்களாக இங்கிலாந்து 14 முறை அடிக்க நார்த் மேசிடோனியா ஒருமுறை கூட இங்கிலாந்தின் கோலை நோக்கிய ஷாட்டை அடிக்கவில்லை. 21 வயது சாகா இங்கிலாந்தின் பெரிய நட்சத்திரமாக உருவாகி வருகின்றார். ஆகவே யூரோ 2024 சாகாவின் கால்பந்து தொடராக ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கால்பந்து நிபுணர்கள் கருதுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT