Published : 18 Jul 2014 10:00 AM
Last Updated : 18 Jul 2014 10:00 AM

காமன்வெல்த் போட்டி: இந்திய அணி சிறப்பாக ஆடும் - பயிற்சியாளர் ஹாவ்குட் நம்பிக்கை

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் இளம் மகளிர் ஹாக்கி அணி சிறப்பாக ஆடும் என அதன் தலைமைப் பயிற்சியாளர் நீல் ஹாவ்குட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்கு ஆயத்தம் ஆகும் வகையில் மலேசியா சென்று அந்நாட்டு அணியுடன் விளையாடிய இந்திய அணி அதில் 6-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

மலேசியாவுடனான வெற்றியின் மூலம் புதிய நம்பிக்கையோடு கிளாஸ்கோ சென்றுள்ளது இந்திய அணி. இந்த நிலையில் ஹாவ்குட் கூறியது: இந்திய அணி இளம் அணியாக இருக்கலாம். ஆனால் மலேசியாவுக்கு எதிராக அவர்கள் விளையாடி விதம் என்னை பெருமையடைய செய்துள்ளது. இதுதவிர காமன்வெல்த் போட்டியில் அவர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

காமன்வெல்த் போட்டியில் கனடாவுக்கு எதிராக ஆடவுள்ள முதல் ஆட்டத்தின் மீதே இந்திய வீராங்கனைகளின் கவனம் உள்ளது. எதிரணியை மனதில் வைத்து சரியான அணியைத் தேர்வு செய்யும் வகையில் நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.

தற்போது இங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருவது இங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு நாங்கள் எங்களை தகவமைத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது. பந்தைக் கடத்துவது மற்றும் பெனால்டி கார்னரில் கோல் அடிப்பது தொடர்பாக இன்று (நேற்று) பயிற்சியளிக்கப்பட்டது. அதை வீராங்கனைகள் சிறப்பாக செய்ததால் இந்த பயிற்சி சாதகமானதாக அமைந்தது என்றார்.

நல்ல முன்னேற்றம்: ரீது ராணி

இந்திய கேப்டன் ரீது ராணி கூறுகையில், “காமன்வெல்த் போட்டிக்கான பயிற்சி மனநிறைவு அளிக்கிறது. போட்டி நெருங்கி வரும் வேளையில் நாளுக்கு நாள் எங்கள் பயிற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் பயிற்சியில் வீராங்கனைகள் அனைவரும் அவர்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர்.

இப்போது பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றுவது தொடர்பாக பயிற்சியளிக்கப்படுகிறது. காமன்வெல்த் போட்டியை வெற்றியோடு தொடங்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் மலேசியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடியது எங்களின் நம்பிக்கையை அதிகரிக்க உதவியது. அதேபோன்றதொரு ஆட்டத்தை காமன்வெல்த் போட்டியிலும் வெளிப்படுத்த ஆர்வமாக இருக்கிறோம்” என்றார்.

இந்திய மகளிர் அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் இந்தியா தவிர, கனடா, நியூஸிலாந்து, டிரினிடாட் அன்ட் டொபாக்கோ, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி 24-ம் தேதி கனடாவையும், 27-ம் தேதி நியூஸிலாந்தையும், 28-ம் தேதி டிரினிடாட் அன்ட் டொபாக்கோவையும், 30-ம் தேதி தென் ஆப்பிரிக்காவையும் சந்திக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x