Published : 19 Jun 2023 05:52 PM
Last Updated : 19 Jun 2023 05:52 PM
வுக்ஸி (Wuxi): ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த 29 வயதான இந்திய வீராங்கனை பவானி தேவி. இந்தத் தொடரின் காலிறுதியில் நடப்பு உலக சாம்பியனான மிசாகி எமுராவை வீழ்த்தி அசத்தினார் பவானி தேவி.
மகளிருக்கான தனிநபர் சேபர் பிரிவு அரையிறுதிக்கு முன்னேற உலகின் முதல் நிலை வீராங்கனையான மிசாகியை 15-10 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இதற்கு முன் மிசாகிக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் பவானி தோல்வியை தழுவி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் சைனப் தயிபெகோவாவிடம் தோல்வியை தழுவினார். அதனால் பவானி தேவி வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்திருந்தார்.
பவானி தேவியின் இந்த வரலாற்று சாதனையை இந்திய வாள்வீச்சு சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா பாராட்டி உள்ளார். “இந்திய வாள்வீச்சு விளையாட்டுக்கு மிகவும் பெருமையான நாள் இது. இதற்கு முன் எந்தவொரு இந்தியரும் செய்யாத ஒரு சாதனையை பவானி செய்துள்ளார். அவர்தான் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர். அதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அரையிறுதியில் தோல்வியை தழுவி இருந்தாலும் இது சிறப்பான முன்னேற்றம்” என அவர் தெரிவித்துள்ளார்.
பவானி தேவி காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியா சார்பில் விளையாடி இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT