Published : 06 Oct 2017 02:43 PM
Last Updated : 06 Oct 2017 02:43 PM
பெரூ அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் 0-0 என்று அர்ஜெண்டினா அணி டிரா செய்ததால் 2018 உலகக்கோப்பைக் கால்பந்துக்கு அர்ஜெண்டினா தகுதி பெறாது போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1970-க்குப் பிறகு அர்ஜெண்டினா அணி இல்லாத உலகக்கோப்பையை ரசிகர்கள் எதிர்கொள்ள நேரிடலாம். மெஸ்ஸி இல்லாத உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியைக் காணத்தான் வேண்டுமா என்று ரசிகர்கள் இப்போதே அங்கலாய்க்கத் தொடங்கியுள்ளனர்.
பார்சிலோனா அணிக்காக ஹாட்ரிக் கோல்களாக அடித்துத் தள்ளும் லயன் மெஸ்ஸி, அர்ஜெண்டினா அணியை உலகக்கோப்பைக்குத் தகுதி பெறச்செய்யாமல் போனால் அது பெருத்த அவமானமாகவே அவரது ரசிகரக்ளை வருத்தமுறச்செய்யும்.
ஆட்டத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் அர்ஜெண்டினா பந்தை தங்கள் கால்வசமே வைத்திருந்தாலும் பெரூ அணி வலுவான தடுப்பாட்டத்தில் அர்ஜெண்டினாவை மடக்கியது.
மெஸ்ஸிக்கு தொடக்கத்தில் ஒரு கோல் வாய்ப்பு கிடைத்தது, கோமெஸுக்கு கிடைத்த இன்னொரு கோல் வாய்ப்பு கிராஸ்பாரைத் தாண்டிச் சென்றது.
இரண்டாவது பாதியில் மெஸ்ஸி அடித்த ஷாட் போஸ்டைத் தாக்கியது. நிறைய வாய்ப்புகளை மெஸ்ஸி உருவாக்கிக் கொடுத்தாலும் சகாக்களின் சொதப்பலினால் கோல்கள் வரவில்லை.
என்னென்னவோ செய்தும், பெரும்பங்கு பந்துகளை தங்கள் வசமே வைத்திருந்தும் அர்ஜெண்டினா அணியினால் பெரூ அணியின் வலுவான தடுப்பை மீறி உள்ளே சென்று கோலாக மாற்ற முடியவில்லை, இதனால் 6-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ள அர்ஜெண்டினா அணி கடைசி போட்டியில் ஈக்வடார் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே அலெக்சிஸ் சான்சேஸ் உதவியுடன் சிலி அணி ஈக்வடார் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 3-ம் இடத்தில் உள்ளது.
ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணிகள் ரஷ்ய உலகக்கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற 5-ம் இடத்தில் உள்ள அணி நவம்பரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இரண்டு சுற்று போட்டிகளை ஆட வேண்டும்.
இந்நிலையில் ஈக்வடாரை அர்ஜெண்டினா தன் கடைசி போட்டியில் வீழ்த்தினாலும் மற்ற போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்தே உ.கோப்பை தகுதி வாய்ப்பு தீர்மானிக்கப்படும்.
ஈக்வடாரை வீழ்த்துவது சுலபமல்ல கடந்த 3 தகுதிச் சுற்று ஆட்டங்களில் அர்ஜெண்டினா 2-ல் தோல்வி கண்டு ஒன்றை டிரா செய்தது.
தென் அமெரிக்கச் சுற்றில் மற்றொரு ஆட்டத்தில் பிரேசில் அணியை பொலிவியா அணி லா பாஸ் மைதானத்தில் 0-0 என்று டிரா செய்ய வைத்தது. பொலிவியா கோல் கீப்பர் கார்லோஸ் லேம்ப், நெய்மரின் 3 கோல் முயற்சிகளை தடுதாட்கொண்டார், இதனால் லேம்ப் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT