Published : 28 Oct 2017 10:20 AM
Last Updated : 28 Oct 2017 10:20 AM
புரோ கபடி லீக் 5-வது சீசன் இறுதி ஆட்டத்தில் இன்று பாட்னா - குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் சென்னை நேரு உள்விளையாட்டரங்களில் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
புரோ கபடி லீக் 5-வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் குஜராத் ஃபார்சூன் ஜெயன்ட்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. அறிமுக தொடரிலேயே குஜராத் அணி இறுதி போட்டியில் கால் பதித்து அசத்தி உள்ளது. லீக் சுற்றுகளில் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த அந்த அணி 87 புள்ளி களுடன் இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான தகுதி சுற்று 1-ல் விளையாட தகுதி பெற்றது. இந்த சுற்றில் 42-17 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை பந்தாடியது.
பர்தீப் நார்வால்
அதேவேளையில் நடப்பு சாம்பியனும் தொடர்ச்சியாக இரு முறை பட்டம் வென்ற அணியுமான பாட்னா, 3-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் உள்ளது. அந்த அணியின் பலமே கேப்டனும் நட்சத்திர ரைடருடனா பர்தீப் நார்வால் தான். இவருக்கு உறுதுணையாக மற்றொரு ரைடரான மோனு கோயத் உள்ளார். பர்தீப் நார்வால் இந்த சீசனில் மட்டும் 25 ஆட்டங்களில் பங்கேற்று 350 புள்ளிகளை குவித்துள்ளார். புரோ கபடி லீக் வரலாற்றில் அவர் ஒட்டுமொத்தமாக ரைடுகள் மூலம் 606 புள்ளிகளை குவித்து சாதனை படைத்துள்ளார்.
இம்முறை பிளே ஆப் சுற்றில் 3 ஆட்டங்களிலும் பர்தீப் நார்வால் தனது அசாத்தியமான திறனால் முறையே 34, 19, 23 புள்ளிகள் குவித்து அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்துள்ளார். அதிலும் எலிமினேட்டர் சுற்றின் 2-வது ஆட்டத்தில் புனேரி பால்டான் அணிக்கு எதிராக கடைசி கட்டத்தில் 10 புள்ளிகளுக்கும் மேல் பின்தங்கியிருந்த நிலையில் பர்தீப் நார்வால் தனது அற்புதமான ரைடால் வெற்றியை சாத்தியமாக்கினார். இன்றைய ஆட்டத்திலும் பர்தீப் நார்வால் கடும் சவால் கொடுக்கக்கூடும்.
மெகர் சிங்
இறுதிப் போட்டி குறித்து பாட்னா பைரேட்ஸ் அணியின் பயிற்சியாளர் ராம் மெகர் சிங் கூறும்போது, “பர்தீப் நார்வால் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டவர். இந்த சீசனில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டங்களில், அந்த அணியின் ரைடர்கள் எங்களுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கவில்லை. ஆனால் எங்களுக்கு எதிராக அவர்கள் சிறந்த தற்காப்பு ஆட்டத்தை மேற்கொண்டார்கள்.
இதனால் எங்களது வெற்றி பர்தீப் நார்வால், மோனு கோயத் ஆகியோரது ரைடுகளை சார்ந்தே இருக்கும். கடந்த ஆட்டங்களில் எங்களது தற்காப்பு ஆட்டம் சிறப்பாக இருந்தது. அதே வழியில் நாங்கள் செயல்படும் பட்சத்திலும், பர்தீப் நார்வாலிடம் இருந்து 50 சதவீத திறன் வெளிப்பட்டாலுமே நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம்” என்றார்.
மன்பிரீத் சிங்
குஜராத் அணியின் பயிற்சியாளர் மன்பிரீத் சிங் கூறும்போது, “எந்த ஒரு விளையாட்டிலும் வலுவான திட்டங்களே வெற்றியை தேடித்தரும். இதையே எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தாரக மந்திரமாக கடைபிடித்து பின்பற்றி வருகின்றனர். அறிமுகமான முதல் சீசனிலேயே நாங்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது பெருமையான விஷயம். பாஸல் அட்ராகலி தலைமையிலான எங்கள் அணி ஒரு குழுவாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இறுதிப் போட்டியில் இதை தொடருவோம்” என்றார்.
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.3 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1.80 கோடி பரிசுத் தொகை கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT