மறக்குமா நெஞ்சம் | 1999-ல் இதே நாளில் நடைபெற்ற உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி: AUS vs SA

ஆஸி. மற்றும் தென்னாப்பிரிக்க இடையிலான போட்டி
ஆஸி. மற்றும் தென்னாப்பிரிக்க இடையிலான போட்டி
Updated on
2 min read

பர்மிங்காம்: எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாத வாக்கில் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதே நாளில் கடந்த 1999-ல் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியை சற்றே ரீவைண்ட் செய்வோம். இந்தப் போட்டி சமனில் முடிந்தது. இருந்தாலும் ஆஸி. இறுதிக்கு முன்னேறியது. தென்னாப்பிரிக்க அணிக்கு ஹார்ட்பிரேக்காக அமைந்தது.

கிரிக்கெட் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத போட்டிகளில் அதுவும் ஒன்று. தென்னாப்பிரிக்க அணிக்கும், உலகக் கோப்பை தொடருக்குமான பயணம் என்பது ரொம்பவே சோகமானது. இதில் மழைக்கும் முக்கிய பங்கு உள்ளது. அது எப்படி என்றால் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் மற்ற அணிகளுக்கு சவால் கொடுத்த தென்னாப்பிரிக்கவை நெதர்லாந்து அணி வெளியேற்றியது போல தான்.

இது 1992-ல் தொடங்கிய கதை. அந்த முறை உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் உலகக் கோப்பை கனவை இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதியில் வாஷ் அவுட் செய்தது மழை. 1996 உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தோல்வி, 2003 உலகக் கோப்பையில் முதல் சுற்றில் வெளியேறியது, 2007 உலகக் கோப்பை அரையிறுதி, 2011 உலகக் கோப்பை காலிறுதி என அந்தப் பட்டியல் நீள்கிறது. 2015 உலகக் கோப்பை அரை இறுதியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக தோல்வி எனச் சொல்லலாம். இந்தப் போட்டியில் மழை குறுக்கீடு இருந்தது.

1999 ஒருநாள் உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா

உலகக் கோப்பை வரலாற்றில் மிகவும் சுவாரஸ்யமான போட்டிகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது. இதே நாளில் கடந்த 1999-ல் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து 49.2 ஓவர்களில் ஆல் அவுட்டாகி 213 ரன்கள் எடுத்தது. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென்னாபிரிக்கா விரட்டியது.

61 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கல்லீஸ் மற்றும் ஜான்டி ரோட்ஸ் இடையிலான கூட்டணி நம்பிக்கை கொடுத்தது. இருவரும் இணைந்து 84 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தொடர்ந்து பொல்லாக் மற்றும் லான்ஸ் குளூஸ்னர் ஆகியோர் தங்கள் அணியை இலக்கை நோக்கி நெருங்க செய்தனர்.

கடைசி ஓவரில் தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு ஒரு விக்கெட் தேவைப்பட்டது. லான்ஸ் குளூஸ்னர் மற்றும் டோனால்ட் பேட் செய்தனர். டேமியன் ஃபிளெம்மிங் அந்த ஓவரை வீசி இருந்தார்.

முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரி விளாசினார் குளூஸ்னர். ரன்கள் சமனில் இருந்தன. மூன்றாவது பந்தை வீசுவதற்கு முன்னர் ஃபீல்டிங்கில் மாற்றம் மேற்கொண்டார் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் வாஹ். மூன்றாவது பந்து டாட் ஆனது. நான்காவது பந்தும் சிறப்பாக வீசப்பட்டது. பந்தை குளூஸ்னர் மிஸ் ஹிட் செய்தார். இருந்தும் ரன் எடுக்க ஓட்டம் எடுத்தார். மறுமுனையில் டோனால்ட், ஓட்டம் எடுக்க சற்று தாமதித்த காரணத்தால் ரன் அவுட் செய்யப்பட்டார். அதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. ஆஸ்திரேலியா நெட் ரன் ரேட் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in