Published : 17 Jun 2023 06:46 AM
Last Updated : 17 Jun 2023 06:46 AM
பர்மிங்காம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி 393 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் ஆட்டம்பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.பாட் கம்மின்ஸ் வீசிய முதல் பந்தைபவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஸாக் கிராவ்லி.
மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கெட் 10 பந்துகளில், 2பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்தநிலையில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் எளிதாக பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஆலி போப் 44 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் நேதன் லயன்பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
தனது 9-வது அரை சதத்தை அடித்த ஸாக் கிராவ்லி 73 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்காட் போலண்ட் பந்தில் அலெக்ஸ் கேரியிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய ஹாரி புரூக் 37 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் நேதன் லயன் பந்தில் போல்டானார். நேதன் லயன் வீசிய பந்தில் கூடுதல் ஸ்பின் மற்றும் பவுன்ஸ் இருந்தது.
இந்த பந்து ஹாரி புரூக்கின் தொடைப் பகுதியில் பட்டு அதன் பின்னர் தோள்பட்டையில் உரசி சற்று உயரமாக சென்றபடி கீழே விழுந்து பிட்ச் ஆகி ஸ்டெம்பை தாக்கியது. இது ஹாரி புரூக்கிற்கு ஏமாற்றம் அளித்தது. இதையடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 8 பந்துகளை சந்தித்து ஒரு ரன் எடுத்த நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில், அலெக்ஸ் கேரியிடம் பிடித்துகொடுத்து நடையை கட்டினார்.
176 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் ஜோ ரூட்டுடன் இணைந்து ஜானி பேர்ஸ்டோ சீராக ரன்கள் சேர்த்தார். ஜோ ரூட் 74 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். ஜானி பேர்ஸ்டோ 78 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் சேர்த்தநிலையில் நேதன் லயனின் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். 6-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டுடன் இணைந்து பேர்ஸ்டோ 121 ரன்கள் சேர்த்தார்.
முதல் இன்னிங்ஸில் 78 ஓவர்கள் விளையாடிய நிலையில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 393 ரன்கள் எடுத்து, டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் 152 பந்துகளில் 118 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. முதல் நாள் ஆடிட் நேர முடிவின் போது 4 ஓவர்கள் விளையாடிய நிலையில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் குவித்துள்ளது ஆஸி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT